கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் மூடப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
நாடு முழுவதும், கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவு சின்னங்களை, மே 15-ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில், இன்று அதிகாலை முதல் மூடப்பட்டது. கோயிலின் பிரதான நுழைவு வாயிலின் கதவுகள் அடைக்கப்பட்டன. இதனால், தஞ்சை பெரிய கோயிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதேபோல், நாமக்கல் மலைக்கோட்டையில் உள்ள, நாமகிரி தாயார் – நரசிம்மர் கோயில் மற்றும் அரங்கநாதர் கோயில் மூடப்பட்டுள்ளன. மத்திய தொல்லியல்துறை சார்பில், இக்கோயில்களின் முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், கொரோனா தொற்று காரணமாக, இன்று முதல் வரும் மே 15-ம் தேதி வரை, பக்தர்கள் வழிபட அனுமதியில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், கோயில் ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடத்தப்படும், எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







