இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் பரிசோதனைக்காக 3 கிராமங்களில் இருந்து 50 டன் எடையிலான தாது மண்ணை வைத்து ஆய்வு செய்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதைத் தொடர்ந்து, விஞ்ஞானிகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
இந்தியாவின் சந்திரயான்-1 தான் நிலவில் தண்ணீரின் மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்தது. 2019-ம் ஆண்டு இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் -2 விண்கலம் தரையிறங்க முடியாமல் தோல்வியை தழுவியது. ஆனால் தற்போது சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதனை நாடு முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனா்.
இந்த வெற்றிக்கு, நாமக்கல் மாவட்டம் குன்னமலை, சித்தம்பூண்டி, ராமதேவம் ஆகிய கிராமங்களில் இருந்து எடுக்கப்பட்ட தாது மண்ணும் மூலக்காரணிகளால் ஒன்றாக கருதப்படுகிறது. நிலவின் மேற்பரப்பை போல் வடிவம் கொண்ட மண் சாா்ந்த பகுதிகள் இந்த மூன்று கிராமங்களில் சுமாா் 5.45 சதுர கிலோமீட்டா் பரப்பளவில் உள்ளன.
சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பாக, இந்த கிராமங்களில் இருந்து எடுக்கப்பட்ட 50 டன் மண்ணை கொண்டு தான் இஸ்ரோ விஞ்ஞானிகள் பரிசோதனை நடத்தினா். அதில் திருப்தியடையவே அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்கினா். இதற்கான ஏற்பாடுகளை சேலம் பெரியாா் பல்கலைக்கழகப் புவி தகவலியல், கோளவியல் துறையினர் செய்தனர். சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதித்துள்ளதால், நாமக்கல் மாவட்ட மக்களும், குறிப்பாக சித்தம்பூண்டி உள்ளிட்ட மூன்று கிராம மக்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
சேலத்துக்கு பெருமை: சந்திரயான்-3 விண்கலத்தின் இன்ஜின் சேம்பரில் பொருத்துவதற்காக ஐசிஎஸ்எஸ்- 1218- 321 என்ற குளிரூட்டப்பட்ட ஸ்டெயின்லஸ் ஸ்டீல் தகடு, சேலம் இரும்பாலையில் இருந்து வழங்கப்பட்டது. சந்திரயான் திட்டத்துக்காக சேலம் இரும்பாலை தொடர்ச்சியாக மூன்று முறை பங்களிப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.







