இந்த 6 கருவிகள்தான் விக்ரம் லேண்டரில் பொறுத்தப்பட்டுள்ளன – அவை என்னென்ன..?

சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ள நிலையில் விக்ரம் லேண்டரில் இடம்பெற்ற கருவிகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காண்போம். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல்…

சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ள நிலையில் விக்ரம் லேண்டரில் இடம்பெற்ற கருவிகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காண்போம்.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ’சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. முதலில் பூமியை நீல்வட்டப்பாதையில் சுற்றிய சந்திரயான் 3-ன் சுற்றுவட்டப் பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு பூமியை சுற்றிவந்த சந்திரயான் 3-ஆனது ஆகஸ்ட் 1-ஆம் தேதி புவி ஈா்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

இதனை அடுத்து மைல்கல் நிகழ்வாக ஆகஸ்ட் -5 ஆம் தேதி நிலவின் ஈா்ப்பு விசைக்குள் சந்திரயான் 3 நுழைந்தது. பின்னர் நிலவை சுற்றிவந்த சந்திரயான் 3-ன் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டது. இதன் அடுத்தக்கட்ட முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 17-ஆம் தேதி உந்துகலனில் இருந்து விக்ரம் லேண்டா் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டது.

பின்னர் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் மிக நெருக்கமான சுற்றுப் பாதையான 25 கி.மீ. x 134 கி.மீ. தொலைவில் விண்கலம் செலுத்தப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 21-ஆம் தேதி சந்திரயான்-2 மூலம் அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் மற்றும் சந்திரயான்-3 ‘விக்ரம்’ லேண்டா் இடையே தகவல் தொடா்பு வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை 5:44 க்கு  நிலவிற்கும் விக்ரம் லேண்டருக்கும் இடையே உள்ள இடைவெளியை சிறிது சிறிதாக குறைக்கும் பணி வெற்றிகரமாக நடைபெற்றது.
அதே நேரத்தில் விக்ரம் லேண்டரின் கால்கள் நிலவை நோக்கி சரியாக திருப்பப்பட்டது. இதனை அடுத்து நிலவை நோக்கி மெல்ல விக்ரம் லேண்டர் நெருங்கிய நிலையில், இறுதியாக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தடம் பதித்தது.  அப்போது “இந்தியா, நான் என் இலக்கை அடைந்துவிட்டேன், நீங்களும் தான்”  என்று சந்திராயன் -3-ல் இருந்து இஸ்ரோவிற்கு செய்தி வந்தது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது.

சந்திரயான் 3 வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பவர் அதன் திட்ட இயக்குனரான வீர முத்துவேல்தான். நிலவில் ரோவர் தரையிறங்குவது தொடர்பான அவரின் ஆய்வு சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்க வழிவகுத்தது. சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் பல கட்ட ஆய்வுக்கு பின்னரே வெற்றி பெற்றுள்ளது.

விக்ரம் லேண்டரில் இடம்பெற்ற மிக முக்கியமான கருவிகள் என்னென்ன..? 

சந்திரயான் 3 லிருந்து நிலவில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ள விக்ரம் லேண்டர் இரண்டு முக்கியமான பகுதிகளை கொண்டுள்ளது. ஒன்று லேண்டர் மற்றொன்று ரோவர் ஆகும். இதில் லேண்டருக்கு விக்ரம் எனவும் ரோவருக்கு பிரக்ஞான் எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

இதன்படி விக்ரம் லேண்டரில் நான்கு முக்கியமான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன

RAMBHA – Radio Anatomy of Moon Bound Hypersensitive Ionosphere and Atmosphere

சுருக்கமாக ரம்பா என அழைக்கப்படும் இந்த கருவி நிலவில் இறங்கி அங்கே வெப்பம் அதிகம் உள்ள மணற் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலவில் வளிமண்டலம் இல்லை. ஆகையால் பகல் நேரத்தில் அதீத வெப்பநிலையும்  இரவு நேரத்தில் உறைபனியும் இருக்கும்.  இந்த நிலையில் ரம்பா கருவி நிலவில் உள்ள மண் மாதிரிகளை எடுத்து பல்வேறு வெப்பநிலையில் மண்ணில் ஏற்பட்ட  மாற்றங்களை ஆய்வு செய்யும்.

ChaSTE – Chandra’s Surface Thermo physical Experiment

செஸ்ட் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்தக் கருவி நிலவில் உள்ள பொருட்கள் நிலை என்ன, அவை வெப்பத்தைத் தாங்கும் தன்மை கொண்டதா அல்லது அதீத வெப்பத்தால் அவை உடைய வாய்ப்புள்ளதா..? என்பது போன்ற தகவல்களைக் கண்டறியும். மேலும் நிலவின் தென் துருவப் பகுதியில் அதீத வெப்பத்தால் மணலில் ஏற்படும் விளைவுகளை கண்டறிய வாய்ப்புள்ளது. இந்த ஆய்வில் நிலவில் உள்ள மண்ணின் தன்மை கெட்டியானதா..? துகள்களாக உள்ளதா..? அல்லது தூசுகளாக உள்ளதா..? போன்றவற்றை ஆராயும்.

ILSA – Instrument for Lunar Seismic Activity

பூமியில் நில அதிர்வுகள் இருப்பது போலவே நிலவிலும் நில அதிர்வுகள் இருக்க வாய்ப்புள்ளது. இதனை ஆராய்வதற்காக ஐ.எல்.எஸ்.ஏ கருவி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கருவில் நிலவின் மேற்பரப்பில் இருக்கும் நில அதிர்வுகளை ஆராயும். ஒருவேளை நிலவில் அதிர்வுகள் ஏதும் இல்லையெனில் இதற்கு முன்பு நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளனவா..?  போன்ற தகவல்களை இந்தக் கருவி சேகரிக்கும்.

மேலும் இந்தக் கருவி நிலவின் உட்பகுதி மற்றும் மேல்பகுதியின் கட்டமைப்புகள் இவை இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகள், அவற்றின் தன்மை போன்வற்றையும் இந்தக் கருவி ஆராய்ச்சி செய்யும்படி வடிவமைக்கபட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் நிலவில் கட்டுமானங்களை வடிவமைப்பதற்கு உதவலாம் என அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Laser Retroreflector Array  – LRA 

எல்.ஆர்.ஏ எனும் Laser Retroeflector Array எனும் கருவி நிலவின் சுழற்சியை ஆய்வு செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.  நிலவு  பூமியைச் சுற்றி வரும்போது அதன் இயக்கம் எப்படி இருக்கும்..?  சீராக சுற்றுகிறதா அல்லது  அதிர்வுகளுடன் சுற்றுகிறதா என்ற தகவல்களைச் சேகரிக்கும். பூமியில் இருந்து நிலவு எவ்வளவு தொலைவில் இருக்கிறது, ஆண்டுக்கு எவ்வளவு தொலைவு விலகிச் செல்கிறது என்பன போன்ற தகவல்களைத் துல்லியமாகக் கண்டறிய முடியும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள்

விக்ரம் லேண்டரில் பொறுத்தப்பட்டுள்ள பிரக்யான் ரோவரில் இரண்டு முக்கியமான கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன.

1. LASER Induced Breakdown Spectroscope – LIBS

2. Alpha Particle X-Ray Spectrometer – APXS

ரோவரில் பொறுத்தப்பட்டுள்ள இந்த கருவிகள், நிலவின் தரைதளத்தில் உள்ள மணல்களை குடைந்து அதில் உள்ள தனிமங்களை ஆராய்ந்து தகவல்களை அனுப்பு என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

– ச.அகமது, நியூஸ் 7 தமிழ்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.