யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழ்நாடு அளவில் 2ம் இடம் பிடித்து அரசு ஊழியர் ஒருவர் அசத்தியுள்ளார்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன்- தனலட்சுமி என்ற தம்பதியின் மகன் ராமகிருஷ்ணசாமி(28). இவர் கடந்த 2016ம் ஆண்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ.மெக்கானிக்கல் படித்து முடித்துள்ளார். பின்னர் அரசு தேர்வுக்கு படித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய பொறியியல் துறை பணியாளர்களுக்கான தேர்வில் வெற்றி பெற்று, 2019-இல் நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராக பணியில் சேர்ந்துள்ளார்.
ராமகிருஷ்ணசாமி, ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு 2019 முதல் 2022 வரை நடைபெற்ற யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி வந்துள்ளார். முதல் மூன்று தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும், விடாமுயற்சியோடு 2022-ல் நான்காவது முறையாக எழுதிய தேர்வில், அகில இந்திய அளவில் 117வது இடத்தையும், தமிழக அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார்.
நாமக்கல் பேருந்து நிலையம் அருகே தனியாக அறை எடுத்து தங்கி பணியாற்றி வந்த இவர், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இரவு, பகல் பாராமல் படித்து, தற்போது இந்த சாதனையை படைத்துள்ளார். அவருக்கு மாவட்ட தொழில் மையம் சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.







