சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய போது முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது,
”அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் ஆகியோரை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் நாகரிகமற்ற முறையில் தரம் தாழ்ந்து பேசுவது இவருக்கு இது முதல் முறையல்ல; தொடர் வாடிக்கையாகிவிட்டது.
பொதுவெளியில் கவனத்தைப் பெற பெண்களை இழிவுபடுத்தும் , தனது அருவருக்கத்தக்க பேச்சுக்குத் தமிழ்நாட்டு மக்களிடமும் முதலமைச்சரிடமும் உடனடியாக நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.




