நாகை – காங்கேசன்துறை இடையே கப்பல் போக்குவரத்து: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் முதல் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகளுக்கான கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள்புரட்சியால்…

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் முதல் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகளுக்கான கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள்புரட்சியால் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு பதவியிழந்தது. அதன் பிறகு ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அரசு அமைந்தது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா அதிக அளவில் உதவிகளை அளித்து வருகிறது.

இந்நிலையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங் 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். இலங்கையின் அதிபரான பிறகு ரணில் இந்தியா வந்திருப்பது இதுவே முதல்முறையாகும். அவரை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் விமான நிலையத்தில் வரவேற்றார்.

அவர் இன்று டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான மிக நீண்ட நெடிய நட்புறவை புதுப்பிக்கவும், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொண்டு பயன்பெறும் வகையிலும் இந்தப் பயணம் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

Imageஇலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்க-வுடனான சந்திப்பிற்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

”கடந்த ஆண்டில் இலங்கை பல்வேறு சவால்களை சந்தித்தது. அண்டை நாடுகளுக்கு முதல் முக்கியத்துவம் என்ற கொள்கையை இந்தியா கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியாவிற்கு இலங்கை மிக முக்கியமான நாடாகும். மேலும் கடல் வழி போக்குவரத்து, விமான வழி போக்குவரத்து, எரிசக்தி வர்த்தகம், சுற்றுலாத்துறை திறன் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் இரண்டு நாடுகளின் உறவு மிக முக்கியம்.

https://twitter.com/narendramodi/status/1682286301331042304

நீண்ட நாள் கண்ணோட்டத்தின் அடிப்படையில் இந்தியா இலங்கை உறவு உள்ளது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் முதல் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகளுக்கான கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான பணி நடந்து வருகிறது.

இந்தியாவின் UPI பணப்பரிவர்த்தனை சேவையை இலங்கையில் தொடங்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இலங்கைத் தமிழர் நலனுக்காக இந்தியா சார்பில் ஏராளமான நலத்திட்ட பணிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.