இந்தியாவின் வளர்ச்சி இந்திய பெருங்கடல் பிராந்திய நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது – இலங்கை அதிபர் ரணில்!

இந்தியாவின் வளர்ச்சி என்பது இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக…

இந்தியாவின் வளர்ச்சி என்பது இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள் புரட்சியால் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு நீக்கப்பட்டது. அதன் பிறகு ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அரசு அமைந்தது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா அதிக அளவில் உதவிகளை அளித்து வருகிறது.

இந்நிலையில் அதிபர் ரணில் 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். இலங்கையின் அதிபரான பிறகு ரணில் இந்தியா வந்திருப்பது இதுவே முதல்முறையாகும். அவரை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் விமான நிலையத்தில் வரவேற்றார்.

Imageஅவர் இன்று புது டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான மிக நீண்ட நெடிய நட்புறவை புதுப்பிக்கவும், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொண்டு பயன்பெறும் வகையிலும் இந்தப் பயணம் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பிற்கு பின்னர் இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்க செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்துள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. இலங்கையின் அதிபராக பொறுப்பேற்றதற்கு பின்னர் தற்போதுதான் முதல் முறையாக இந்தியா வருகிறேன். இந்தியாவின் வளர்ச்சி என்பது இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கிறது.

இலங்கையின் பொருளாதார மீட்புக்காக நாங்கள் பணிபுரிந்து வருகிறோம் இதில் இந்தியாவின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாக உள்ளது. இலங்கையின் மிகக் கடுமையான சூழலின் போது இந்திய அரசும் இந்திய மக்களும் இலங்கைக்கு உறுதுணையாக இருந்ததற்கு இலங்கை சார்பில் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.