தவெக ஆட்சியில் “இந்தியும் ஆங்கிலமும்” தான் இருமொழிக் கொள்கையா? – திமுக கேள்வி

காவல் துறை கொடி நாளில் தமிழ்நாடு காவலர்கள் சீருடையில் அணிந்திருந்த Badgeல் தமிழ் இடம்பெறவில்லை என திமுக குற்றம்சாட்டியுள்ளது.

காவலர் வீரவணக்க நாள் இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நாட்டைப் பாதுகாக்கும் பணியிலும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த காவல் துறையினரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

காவல் துறை கொடி நாளில், இந்தியும் ஆங்கிலமும் மட்டும் இடம்பெற்றுள்ள Badge-ஐ தமிழ்நாடு காவலர்கள் சீருடையில் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார்களா? என திமுக கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து திமுக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், “தமிழும் ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. தவெக ஆட்சியில் அது “இந்தியும் ஆங்கிலமும்” என்ற இருமொழிக் கொள்கையாக மாறிவிட்டதா?

காவல் துறை கொடி நாளில், இந்தியும் ஆங்கிலமும் மட்டும் இடம்பெற்றுள்ள badge-ஐ தமிழ்நாடு காவலர்கள் சீருடையில் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவது ஏன்? தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? காவல்துறை என்பது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட துறை என்பதை, அந்தத் துறையைத் தனது நேரடிப் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் அறிவாரா?

அல்லது மாநிலத்தின் மொழி உரிமையோடு சேர்த்து, காவல்துறை மீதான தனது அரசியல் பொறுப்பையும் ஒன்றிய அரசிடம் ஒப்படைத்து சரணடைந்துவிட்டாரா? தமிழ்நாட்டில் தமிழ் கேட்பது கூட இன்று ஒரு கேள்வியாக வேண்டிய நிலை வந்திருப்பதே வேதனை. பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு அழுத்தத்தை கொடுத்த நிலையில் திமுக அரசு ஒருபோதும் அதை ஏற்காமல் இருந்தது. இன்றைய அரசுக்கு முதுகெலும்பு ஏது !” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.