தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (அக்டோபர் 21) காலை 5.30 மணியளவில் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. தொடர்ந்து, காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் அது நிலவியது.
இதன் காரணமாக இன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும், புதுச்சேரியிலும் அநேக இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
இதற்கிடையில், இன்று (அக்டோபர் 21) இரவு 10 மணி வரை தமிழகத்தின் 19 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




