குடகும், இடுக்கியும் தமிழ்நாட்டுடன் இருந்திருந்தால் செல்வம் கொழித்து இருக்கும்: சீமான் பேச்சு!

காவிரி உற்பத்தியாகும் குடகும், முல்லைப்பெரியாறு உற்பத்தியாகும் இடுக்கியும் தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் உலகிலேயே செல்வம்  கொழிக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருந்திருக்கும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நாம் தமிழர்…

காவிரி உற்பத்தியாகும் குடகும், முல்லைப்பெரியாறு உற்பத்தியாகும் இடுக்கியும் தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் உலகிலேயே செல்வம்  கொழிக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருந்திருக்கும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக வைகை அணை
சாலைப்பிரிவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
முல்லைப்பெரியாறு அணையை பென்னிக்குவிக் என்ற பெருந்தகை கட்டினார் .அதற்காக அவரது மனைவி தனது 300 சவரன்  நகையை கொடுத்தார். நமது வறட்சியை போக்க நம்மை வளமாக்க அவர்கள் அணையை கட்டினார்கள். அணையை கட்டியது நமது முன்னோர்கள். அந்த அணை வெறும் சுண்ணாம்பும் மண்ணும் அல்ல. அவர்களது உழைப்பில் வியர்வையும் ரத்தமும் சதையுமாக இருக்கிறது .நாம் கட்டிய அணை நமக்கு பயன்படவில்லை. இடுக்கி மாவட்டம் கேரளாவுக்கு சென்றதால் நாம் தண்ணீருக்கு அலைகிறோம். நமது இடத்தை இழந்ததால் நமது பலத்தை இழந்தோம்.
அதேபோல காவிரி உற்பத்தியாகும் குடகு பகுதியில் 90 விழுக்காடு தமிழர்கள்
வாழ்ந்தார்கள். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அவர்கள் தமிழ்நாட்டோடு இணையுங்கள் என்று போராடினார்கள். ஆனால்  கர்நாடகா மாநிலத்தோடு இணைக்கப்பட்டார்கள். இது வரலாற்றில் மிகப்பெரிய பிழை. காவிரி உற்பத்தியாகும் குடகும் முல்லைப்பெரியாறு  உற்பத்தியாகும் இடுக்கியும் இருந்திருந்தால் தமிழ்நாடு உலகிலேயே செல்வம் கொழிக்கும் நாடாக இருந்திருக்கும்.
ஒன்றரை கோடி வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களுக்கு ஓட்டுரிமை
அளித்தால் அரசியலையும் அதிகாரத்தையும்  தீர்மானிப்பார்கள்.  தமிழர்கள் அரசியலும் அதிகாரமும் அற்றவர்களாக இருப்போம். மணிப்பூரில் இட ஒதுக்கீடு பிரச்சனையில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள வெளிநாட்டுக்காரர்களின் சமாதிகள் எடுக்கப்பட்டதாக திமுகவினர் கூறி வருகின்றனர் ஆனால் நீங்கள் மட்டும் கடற்பரப்பை அழித்து பேனா சின்னம் அமைக்கலாமா?  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மெரினா கடற்கரையில் உள்ள 4 சமாதிகளையும் அகற்றுவது தான் முதல் பணியாக இருக்கும்.
இவ்வாறு சீமான் பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.