என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டத்தில் பரபரப்பு! தொழிலாளி ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதி!

நெய்வேலியில் நடைபெற்று வரும் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டத்தில், தொழிலாளி ஒருவர் மயங்கி விழுந்தார். பதவி உயர்வு, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த…

நெய்வேலியில் நடைபெற்று வரும் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டத்தில், தொழிலாளி ஒருவர் மயங்கி விழுந்தார்.

பதவி உயர்வு, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 19 நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் முன்பு 2-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தின்போது தொழிலாளி ஒருவர் மயங்கி விழுவே, அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், ஏற்கனவே என்எல்சி-யில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் நடத்திவரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கும், என்எல்சி நிறுவனத்திற்கும் பாதுகாப்பு வழங்கக் கோரியும், தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதை தடுக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் என்எல்சி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணயில் என்.எல்.சி நிறுவனத்திற்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையேயான ஊதிய உயர்வு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியத்தை நியமிக்க இருப்பதாக நீதிபதி தண்டபாணி தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக இரு தரப்பும் கலந்தாலோசித்து, முடிவெடுத்து ஆகஸ்ட் 11-ம் தேதியன்று தெரிவிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை மேலும் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.