இமயமலை பயணம் மேற்கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திரைப்படங்களில் பிசியாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு ஓய்வு கிடைக்கும் போது இமயமலை செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். குறிப்பாக தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் அவர் இமயமலை செல்வது வழக்கம் . கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக அவர் கடந்த 4 ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லவில்லை.
அதே போல் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகி உள்ள நிலையில், உலக அளவில் சுமார் 300 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருந்ததாக ரசிகர்கள் உற்சாகத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 9ம் தேதி ரஜினிகாந்த தனது இமயமலை பயணத்தை தொடங்கினார். இந்த பயணத்தில் அவா் 7 நாள்கள் அங்கு தங்கியிருந்து பாபாஜி குகை, கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல உள்ளார் என கூறப்பட்டது. ஆன்மீக தலங்களுக்கு செல்லும் முன் ரஜினிகாந்த் அங்குள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று குருக்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதுடன் அவர்களின் ஆன்மீக உரைகளைக் கேட்டு அவரும் சிறப்புரை ஆற்றியதாக கூறப்பட்டது.
தற்பொழுது இமயமலையில் தனது ஓய்வு நாட்களை கழித்து வரும் ரஜினிகாந்த் சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து வழக்கம் போல தனது நண்பர்களுடன் தனது பயணத்தை அவர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. அவர் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







