நாடு முழுவதும் என்ஐஏ சோதனை நடைபெற்றதை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தேசியப் புலனாய்வு முகமையும், அமலாக்கத் துறையும் இணைந்து இந்தியா முழுவதும் 15 மாநிலங்களில் 93 இடங்களில் சோதனை நடத்தினர். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சோதனை நடத்தபட்டது. இதில் 45-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரும் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதோடு, முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், என்ஐஏ சோதனைக்கு இஸ்லாமிய அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய அவர்கள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் நடைபெற்ற NIA சோதனை அத்துமீறி நடைபெற்றுள்ளது என குற்றம்சாட்டினர்.
மதுரையில் PFI அமைப்பின் நிர்வாகி வீட்டின் உள்ளே நுழையும் போது NIA அதிகாரிகள் பணக்கட்டுடன் உள்ளே சென்றுள்ளார்கள். மனிதாபிமானம் இல்லாமல் NIA அதிகாரிகள் காட்டு மிராண்டி தனமாக மிரட்டும் வகையில் குடும்பத்தார்களிடம் நடந்து கொண்டுள்ளார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். மிக வெளிப்படையாக செயல்படும் அமைப்பை சிறுபான்மையினரை மிரட்டும் விதமாக NIA நடந்து கொண்டுள்ளது எங்களை வருத்தம் அடையச் செய்கிறது.
இனிமேல் எங்களுடைய கண்டனங்கள் வலுவாக இருக்கும். பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் கடுமையாக விசாரிக்க வேண்டும்
சிறுபான்மையர் மீது குற்றம் சாட்டுவதை வன்மையாக கண்டிக்கிறோம். பாஜக மத்திய அரசு தான் சொல்கிறது தீவிரவாத நாட்டில் செயல்கள் நடைபெறவில்லை என.
தீவிரவாதத்திற்கு பயிற்சி மற்றும் பணம் அளித்துள்ளது தொடர்பாக உரிய ஆதாரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். உரிய ஆதாரத்தை தான் நாங்கள் கேட்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.
பாபர் மசூதியை நாங்கள்தான் இடித்தோம் என ஒத்துக்கொண்ட ஆர் எஸ் எஸ் காரர்களை கைது செய்ய அரசு மறுக்கிறது என குற்றம்சாட்டிய அவர்கள், இது சர்வாதிகார நாடா? இல்லை இது ஜனநாயக நாடா? என கேள்வி எழுப்பினர். மேலும் ஜனநாயக ரீதியிலும் சட்டப் போராட்டத்திலும் இனி நாங்கள் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
-இரா.நம்பிராஜன்








