இளைஞரை ஓட ஓட விரட்டி கொலை செய்த மர்ம நபர்கள்

சென்னை பாடியில் இளைஞரை ஓட ஓட விரட்டி மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாடி புதுநகர் பகுதியில் 2வது தெருவைச்…

சென்னை பாடியில் இளைஞரை ஓட ஓட விரட்டி மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாடி புதுநகர் பகுதியில் 2வது தெருவைச் சேர்ந்தவர் கண்ணதாசன் (31). இவர் இரவு 9 மணி அளவில் தனது அடுக்குமாடி வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வெளியே அழைத்து தலைக்கவசம் அணிந்திருந்த 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கண்ணதாசனை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.

கண்ணதாசன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் ஜே.ஜே.நகர் போலீசார் மற்றும் திருமங்கலம் உதவி ஆணையர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலை செய்த நபர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதே தெருவில் கடந்த ஆண்டு இரண்டு கொலைகள் நடந்துள்ளதால் அதன் தொடர்ச்சியாக முன்விரோத காரணத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து இப்பகுதியில் கொலை சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் வசித்து வருகின்றனர். கொலை சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருப்பதற்கு போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்றும் அதிக இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் காவல் துறையினருக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.