மயில்சாமி சிவ பக்தராக இருந்தாலும் தனது மகனுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்துவைத்துள்ளதாக பலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
1965 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த மயில்சாமி, 1984ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான தாவணி கனவுகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தூள், கில்லி, திருவிளையாடல் ஆரம்பம், வீரம், வீட்டுல விஷேசம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். குறிப்பாக மாயாண்டி குடும்பத்தார் படத்தில் ஒரு மாறுபட்ட மயில்சாமியை வெளிப்படுத்தியிருப்பார். உதயநிதி ஸ்டாலினுடன் நெஞ்சுக்கு நீதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார் மயில்சாமி.
திரையுலக பயணம் ஒருபுறம் இருந்தாலும் தனது டிவி நிகழ்ச்சிகளையும், மேடை நிகழ்ச்சிகளையும் தனி டிராக்கில் தொடர்ந்து அதிலும் முத்திரை பதித்தார். சன்டிவியில் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி காமெடி டைம் மிகவும் பிரபலமானது. அந்த தொலைக்காட்சியில் வெளிவந்த அசத்தப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் தொடர்ந்து நடுவராக வந்து கவனம் ஈர்த்தார் மயில்சாமி.
சமூக தொண்டுகளில் அதிக ஆர்வம் காட்டி வந்த மயில்சாமி, பிற நடிகர்களால் வள்ளல் என புகழப்படும் அளவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்துவந்தார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி அவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு பிறருக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். சமூகத் தொண்டுகளில் மயில்சாமி காட்டிய ஆர்வம் அவரை அரசியல் கருத்துக்களையும் துணிச்சலாக பேச வைத்தது.
அண்மை செய்திகள்: இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஊடுருவலை தடுக்க நவீன பாதுகாப்பு வேலி..!
முன்னணி நடிகர்களே அரசியல் விஷயங்களில் கருத்துக்களை சொல்ல தயங்கிய நேரத்தில் ஒரு நடுநிலையாளராக டி.வி விவாதங்களில் கலந்துகொண்டு தனது மனதில் பட்ட கருத்துக்களை துணிச்சலாக பேசினார் மயில்சாமி. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாராமல் தனக்கு தவறு என தோன்றும் அரசியல் நடவடிக்கைளை துணிச்சலாக அவர் விமர்சித்தார்.
மயில்சாமிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மயில்சாமியின் மூத்த மகன் அன்பு மற்றும் இளைய மகன் பெயர் யுவன் இருவரும் சினிமாவில் ஹீரோவாக நடித்துள்ளனர். குறிப்பாக மயில்சாமியின் இளைய மகன் யுவன் தற்போது பா. இரஞ்சித் தயாரிக்கும் தண்டகாரண்யம் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மயில்சாமிக்கு ஆன்மீகத்திலும் அளப்பரிய ஈடுபாடு உண்டு. சிவனின் தீவிர பக்தரான அவர், திருவண்ணமலைக்கு அடிக்கடிக் செல்வதுடன், திரையுலக பிரபலங்கள் பலரையும் அங்கு கூட்டிச் சென்று தனது ஆன்மீக அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்வார். பாடகர் எஸ்.பி.பியை திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்று அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் பாட வைத்ததும் மயில்சாமிதான். இப்படி தீவிர சிவபக்தராக வாழ்ந்த மயில்சாமியின் உயிர் சிவராத்திரி அன்றே சிவனடி சேர்ந்திருப்பதாக மயில்சாமியின் நண்பர்கள் நெகிழ்கிறார்கள்.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய மயில்சாமியின் உயிர் அந்த சிவராத்திரி முடிவதற்குள்ளேயே பிரிந்தது.
இந்நிலையில் மயில்சாமியின் மூத்த மகன் அன்புவுக்கும் தமிழ்நாடு துணை சபாநாயகர் பிச்சாண்டியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மயில்சாமி சிவ பக்தரான இருந்தாலும் தனது மகனுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்துவைத்துள்ளதாக பலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.








