கோவையில் மிலாடி நபியை முன்னிட்டு 60 பிரம்மாண்ட அண்டாக்களில் 3200 கிலோ ஆட்டிறைச்சியை கொண்டு மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டு, பொது மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டது.
இறை தூதரான முகமது நபியின் பிறந்த நாள் மிலாடி நபி விழாவாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையிலும் மிலாடி நபி விழாவை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள பள்ளிவாசலில் மிலாடி நபி விழாவிற்காக அனைத்து மதத்தினருக்கும் குறைந்த விலையில் பிரியாணி விநியோகம் செய்வதற்காக பிரியாணி தயாரிக்கும் பணிகள் நேற்று இரவு முதலே நடைபெற்றது. பள்ளிவாசல் அருகில் உள்ள இடத்தில் 60 பிரம்மாண்ட அண்டாக்களில் 3000 கிலோ அரிசி, 350-க்கும் மேற்பட்ட ஆடுகள் அறுக்கப்பட்டு, 3200 கிலோ ஆட்டிறைச்சியை கொண்டு மட்டன் பிரியாணி தயாரிக்கப்பட்டது. சுமார் 175 பேர் கூடி விடிய விடிய பிரியாணி சமைத்து இன்று காலை முதல் வியாபார நோக்கமின்றி ஒரு கிலோ மட்டன் பிரியாணி 1000 ரூபாய் என்ற விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
முகமது நபி பிறந்தநாளை முன்னிட்டு, லாப நோக்கமின்றி பிரியாணி தயாரிக்கப்பட்டு 15 ஆயிரம் பேர் சாப்பிடும் வலையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக பள்ளி வாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர். முஸ்லீம், இந்து, கிறிஸ்தவ மக்கள் என அனைத்து தரப்பினரும் குறைத்த விலையில் பிரியாணி வாங்கி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். 135 ஆண்டுகள் பழமையான கோட்டைமேடு பள்ளிவாசலில் 70 வருடங்களாக இந்த முறை பின்பற்றப்பட்டு வருவதாகவும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதே போல கோவை உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியில் சுன்னத் ஜமாத் யூத் பெடரேசன் சார்பில் 12 ஆயிரம் பேருக்கு மிலாடிலநபியை முன்னிட்டு இலவசமாக குஸ்கா வழங்கப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று குஸ்காவினை வாங்கி சென்றனர்.