முத்துக்குமரன் உடலை நாளை பிற்பகலில் தமிழ்நாடு கொண்டு வர அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன், குவைத் நாட்டிற்கு செப்டம்பர் 3ஆம் தேதி வேலைக்குச் சென்றார். பாலைவனத்தில் தன்னை ஆடு, ஒட்டகம் மேய்க்க வைத்துவிட்டதாகவும், மின் வசதிகூட இல்லாத இடத்தில் தங்கியுள்ளதாகவும் மனைவியிடம் தொலைபேசியில் கூறி அழுதுள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு திரும்ப முயற்சி செய்த முத்துக்குமரன் செப்டம்பர் 7ஆம் தேதி கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
துப்பாக்கியால் முத்துக்குமரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், காயங்கள் காரணமாக மரணம் என குவைத் விசாரணைக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். முழுமையான விசாரணை அறிக்கை, என்ன மாதிரியான காயங்கள் என பார்த்த பிறகே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என தமிழ்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-ம.பவித்ரா








