முஸ்லிம் இடஒதுக்கீடு தொடர்பான பாஜகவின் சர்ச்சை வீடியோவை நீக்க எக்ஸ் தளத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதையடுத்து அந்த வீடியோவை எக்ஸ் தளம் நீக்கியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கி விட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஏப்.26ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், மே 7 ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது. இறுதி மற்றும் 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அந்த வகையில், கா்நாடத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவுற்ற நிலையில், மற்ற 14 தொகுதிகளுக்கு மே. 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
முன்னதாக, 3-ஆம் கட்ட தோ்தல் பிரச்சார நேரத்தில், கா்நாடக பாஜகவின் எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் “பழங்குடியினா், பட்டியலினத்தவா், ஓபிசி பிரிவினரிடமிருந்து இடஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம் சமூகத்தினருக்கு காங்கிரஸ் வழங்குகிறது. இதனை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும், கா்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவும் முன்னின்று நடத்துகின்றனா்” என்று சித்தரிக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியானது.
இதனையடுத்து இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி கா்நாடக மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் புகாரளித்தது. காங்கிரஸ் தனது புகாரில், பட்டியலினத்தவா் மற்றும் முஸ்லிம்கள் இடையே பகையை ஏற்படுத்தும் வகையில் பாஜகவின் பதிவு இருப்பதாக தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த வீடியோவை நீக்க கோரி கா்நாடக தோ்தல் அதிகாரி உத்தரவிட்டுருந்தார். ஆனால் அந்த பதிவு நீக்கப்படாததால், எக்ஸ் வலைதளத்துக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில் சா்ச்சைக்குரிய பதிவை எக்ஸ் வலைதளத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் ‘எக்ஸ்’ வலைதளம் அந்த பதிவை நீக்கியுள்ளது.








