பாபுலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு இஸ்லாமிய தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில், இந்து, இஸ்லாம், பெளத்தம் உள்பட பல்வேறு மதங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அஜித் தோவல், நாட்டின் முன்னேற்றத்தை சீர்குலைக்கும் சூழலை உருவாக்க சில அமைப்புகள் முயற்சி செய்வதாகக் குறிப்பிட்டார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட சில தீவிர அமைப்புகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த அமைப்புகளுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பது மட்டும் போதாது என குறிப்பிட்டார்.
மத நம்பிக்கைகளின் அடிப்படையில் சிலர் தங்கள் சமூகத்திற்குள்ளும் வெளியேயும் முரண்பாடுகளை உருவாக்க விரும்புவதாகத் தெரிவித்த அஜித் தோவல், இதுபோன்ற நேரங்களில் பெரும்பாலானோர் மௌனமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். வெற்றுப் பார்வையாளர்களாக இருக்க முடியாது என தெரிவித்த அஜித் தோவல், தவறு செய்பவர்களுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்றும் அப்போதுதான் சுமூக சூழல் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.
நாம் அனைவரும் சேர்ந்ததே நமது நாடு எனும் உணர்வு வலுவடைய வேண்டும் என்றும், நமது நாட்டின் மீது நமக்கு பெருமித உணர்வு ஏற்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய அஜித் தோவல், ஒவ்வொரு மதமும் இங்கு சுதந்திரமாக இருக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
உதய்பூர் தையல்கடைகாரர் கன்ஹையா லால், அமராவதி மருந்துகடை உரிமையாளர் உமேஷ் கோல்ஹே, கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக இளைஞரணி நிர்வாகி பிரவீன் நெட்டாரு ஆகியோர் கொலை செய்யப்பட்டதில் PFI அமைப்புக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, PFI அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட சூஃபி மதகுருமார்கள் வலியுறுத்தினர்.
இதன் காரணமாக, தேச விரோத செயல்களில் ஈடுபடும், பிரிவினையை ஏற்படுத்த முயலும், மக்களிடையே முரண்பாடுகளை உருவாக்கும் PFI மற்றும் பிற அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மதங்களுக்கு எதிராகவும், மதங்களை பின்பற்றுபவர்களுக்கு எதிராகவும் வெறுப்பைப் பரப்புவதற்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதால், அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.