சென்னையில் 117 கி.மீ தூரத்திற்கு மெகா ஸ்ட்ரீட் அமைக்கும் திட்டத்திற்கான தீர்மானம் பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.-
விளம்பர பலகைகள் மீதான விளம்பர வரி குறித்த தணிக்கை தடைகளை நீக்க அரசின் கருத்துரு பெற அரசுக்கு செயற்குறிப்பு அனுப்பும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக வழங்கப்பட்டது மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் புதிய திருத்திய வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலங்களை ஒதுக்கீடு செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை பள்ளிகளில் கணினி உதவியாளர்கள்,தற்காலிக கணினி ஆசிரியர்கள், தற்காலிக இளநிலை உதவியாளர்கள், தற்காலிக பாதுகாவலர்கள் மழலையர் பிரிவில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆயாக்கள் நியமிப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்து சென்னை பள்ளிகளிலும் பள்ளி இல்ல நூலகம் அமைத்து செயல்பட தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக காற்றின் தரத்தை கண்காணிக்கும் நிலையத்தை பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் ஒரு இடத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் நான்கு இடத்திலும் அமைக்கும் பணிக்கான மதிப்பீட்டிற்கு ஒப்புதல் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை முழுவதும் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் போதிய வெளிச்சத்தை மேம்படுத்த எல்இடி விளக்குகளுடன் கூடிய உயர் கோபுர மின் விளக்குகளை 68.99 கோடி மதிப்பீட்டில் நிர்பயா நிதி மூலம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் உள்ள 87 சாலைகளில் 117 கிலோ மீட்டர் தொலைவிற்கு தெருக்களை மேம்படுத்தும் மெகா ஸ்ட்ரீட்ஸ் திட்டத்திற்கான அரசின் நிர்வாக அனுமதி கோரும் தீர்மானம் உள்ளிட்ட 98 தீர்மானங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.







