முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள் சினிமா

“சிங்கக் குரலோன்” டி.எம்.சௌந்தரராஜன் 100வது பிறந்தநாள் நினைவுகள்…


பி.ஜேம்ஸ் லிசா

கட்டுரையாளர்

தமிழ்சினிமாவின் சாகாவரம் பெற்ற குரலுக்கு சொந்தக்காரர் டி.எம்.சௌந்தரராஜன். மதுரையில் தொடங்கி உலகையே வலம் வந்த பாடகராக புகழ் பெற்ற இவர், தமிழிசை வரலாற்றில் தன் பேரை நீங்காத ஒன்றாக எழுதிய பெருமைக்குரியவர். தன் தனித்துவமான குரலால் தமிழ் பக்தி இசை மரபுக்கு அவர் செய்த கொடை மிகவும் அதிகம்…40 ஆண்டுகள் தமிழ்த் திரைப்படங்களில் பாடிய இந்த சிம்மக்குரலோனுக்கு இன்று 100வது பிறந்த நாள்.

மதுரையில் 1923-ம் ஆண்டு மார்ச் மாதம் 24 ந்தேதி அப்பா மீனாட்சி, அம்மா வெங்கடம்மா தம்பதியனருக்கு மகனாக பிறந்தவர். பிரபல இசை வித்துவான் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயின்ற இவர், இசை ஞானம் அடைந்தபின் தன் அறிவை பெருக்கிக்கொள்ள சிறியது, பெரியது என வித்யாசம் காட்டாமல் அனைத்து கச்சேரிகளிலும் பாட ஆரம்பித்தார். இதன் மூலம் இவர் தன் திறமையை மெருகேற்றிக் கொண்டதோடு, அந்த முயற்சியே டி.எம்.எஸ் திரையுலகில் நுழைய காரணமாகவும் அமைந்தது. மேலும் இவரது குரல் அன்றைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் குரலை ஒத்திருந்தது. இதனால் பலர் “டேய் உன் குரலுக்கு பாகவதர் போல் நீ எங்கேயோ போகப்போறெ” என கூறி பாராட்டுவார்களாம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்படி ஒருமுறை இவர் தொடர்ந்து மேடை கச்சேரிகள் செய்து வந்த சமயம் தியாகராஜ பாகவதர் திருச்சியில் கச்சேரி செய்ய வந்துள்ளார். அதே கச்சேரியில் அவருக்கு முன்பு பாடிய சிறுவன் ஒருவனது குரல் அவரை ஈர்த்துவிட, ஆச்சர்யத்துடன் சிறுவனை அழைத்து பாட சொன்னார் பாகவதர். பாகவதரின் புகழ்பெற்ற பாடல் ஒன்றை அட்சரம் பிசகாமல் பாடி காண்பித்தான் அந்த சிறுவன். உடனே தியாகராஜபாகவதர் “சென்னைக்கு வா தம்பி நல்ல எதிர்காலம் உனக்கு இருக்கு” என வாஞ்சையாய் தலையை தொட்டு ஆசிர்வதித்தாராம். அந்த சிறுவன் தான் டி.எம். சவுந்தரராஜன்.

பாகவதர் சொன்ன வார்த்தையை போலவே டி.எம்.எஸ் சென்னைக்கு வந்தபோது பல ஆண்டுகளாகக் கச்சேரிகளில் பாடிய அவரை கவனித்து வந்த சுந்தரராவ் நட்கர்னி என்ற இயக்குநர் அவரது அடுத்த படமான ‘கிருஷ்ண விஜயம்’ (1950) என்னும் திரைப்படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடலைப் பாடுவதற்கு வாய்ப்பளித்தார். இந்தப் படம், 1946ல் எடுக்கப்பட்டிருந்தாலும், 1950ல் தான் வெளியானது. இதில், டி.எம்.எஸ். அவர்கள் ஐந்து பாடல்கள் பாடியுள்ளார். இதுவே அவர் திரையுலகில் நுழைவதற்கான ஒரு வழியை வகுத்தது.

தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸின் மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாட வாய்ப்பு வந்த நேரத்தில் தான், மலைக்கள்ளனில் எம்.ஜி.ஆருக்காக இவர் பாடிய எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” பாடல் பட்டிதொட்டியெல்லாம்
டி.எம்.எஸ் என்ற மந்திரக்குரலோனை கொண்டு போய் சேர்த்தது.

இதற்கிடையில், சிவாஜி கணேசன் அவர்களுக்குப் பின்னணிப் பாடிய சி.எஸ்.ஜெயராமனுக்கு பதிலாக, டி.எம்.எஸ் அவர்களைப் பாட வைக்கும் நோக்கமாக மருதகாசி, அவரை இசையமைப்பாளார் ஜி. ராமநாதனிடம் அறிமுகம் செய்து வைத்தார். ‘சிவாஜி கணேசன் அவர்களுடைய குரலுக்கு டி.எம்.எஸ்ஸின் குரல் பொருந்துமா? என்கிற சந்தேகிகத்துடனேயே தூக்கு தூக்கி படத்திற்க்காக ‘சுந்தரி சௌந்தரி’
மற்றும் ‘ஏறாத மலைதனிலே’ என்ற பாடல்களை பாட வைத்துள்ளார் ஜி. ராமநாதன். பிறகு சிவாஜியின் குரலைப் போலவே, அவர் பாடியதால், மிகவும் மகிழ்ச்சி அடைந்து, அப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாடும் வாய்ப்பை வழங்கியுள்ளார். இப்படி அடுத்தடுத்த இருபெரும் நட்சத்திரங்களின் படங்களிலும் பாடிய பாடல் வெற்றிப் பெற்று, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், டி.எம்.எஸ் அவர்கள் தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமானார்.

அந்த பிரபலமே தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்பை அவருக்கு பெற்று தந்தது. சொல்ல போனால் சென்னைக்கு வந்த சமயத்தில் பாகவதரைப் போல் நடிகராக வேண்டும் என்பதே டிஎம்எஸ்ஸின் ஆசையாக இருந்தது. இருப்பினும் தனது குரலுக்கு கிடைத்த வரவேற்பினால் அதனை ஒதுக்கி பின்னணி பாடகராக மாறிப்போனார். அதில் குறிப்பாக, எம்.ஜி.ஆர் சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின் திரையுலக வரலாற்றில் டி.எம்.எஸ் தவிர்க்க முடியாதவர். காரணம், எம்.ஜி.ஆர் பாட்டு சிவாஜி பாட்டு என இவர்களை அடையாளப்படுத்தும் அனைத்து பாடல்களும் டி.எம்.எஸ் பாடியவையாக இருப்பதால் தான். அதுவும் இருவரது உடல் மொழிக்கும் ஏற்றுவாரு, உரத்த குரலும் அழுத்தமான பேச்சு வன்மையும் கொண்ட சிவாஜி பாடல்களுக்கு அடிவயிற்றிலிருந்து குரலை எழுப்பி பாடிய டி.எம்.எஸ். எம்.ஜி.ஆரின் சன்னமான குரலுக்கு கண்டமும் நாசியும் இணையும் இடத்திலிருந்து பாடி நம்மை மெய் சிலிர்க்க வைத்திருப்பார்.

இதன் காரணமாகவே, 1955 ஆம் ஆண்டு துவங்கி 1977ஆம் ஆண்டு வரை எம்.ஜி.ஆருக்கும், 1995 ஆம் ஆண்டு வரை சிவாஜி கணேசனுக்கும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இன்றும் எம்.ஜி.ஆர், சிவாஜி என்று பேசும் போதெல்லாம் டி.எம்.எஸ். அவர்களின் முகமும் நம் நினைவிற்கு வரும் உணர்வை ஏற்படுத்தினார்.

இவ்விருவர் தவிர என்.டி.ராமராவ், ஜெமினி கணேசன், ராஜ்குமார், பிரேம் நஸீர், நாகேஸ்வர ராவ், எஸ்எஸ் ராஜேந்திரன், ஜெய்சங்கர் ,ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், சிவகுமார் என அந்தக்கால தென்னிந்திய பிரபலங்கள் அனைவருக்குமே பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜன், கிட்டத்தட்ட 11000 தமிழ்ப் பட பாடல்களை பாடி உள்ளார். மேலும் பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிந்து, பல பாடல்களுக்கு இசையமைத்தும் உள்ளார்.

மேலும் தான் சிறந்த பின்னணி பாடகர் என்பதையும் தாண்டி, நடிகராக வேண்டும் என்ற கனவையும் நிறைவேற்றும் விதமாக அருணகிரிநாதர், பட்டினத்தார், தேவகி, கல்லும் கனியாகும் உள்பட சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இது தவிர, கல்லும் கனியாகும் படத்தை தயாரித்து ஒரு தயாரிப்பாளராகவும், முத்துராமன் நடித்த பலப்பரீட்சை படத்துக்கு இசையமைத்து ஒரு இசையமைப்பாளராகவும் தன்னை நிரூபித்துக்காட்டியுள்ள இவர், ‘பாடகர் திலகம்’, சிங்கக் குரலோன்’, ‘இசை சக்கரவர்த்தி’, இசைக்கடல்’, ‘எழிலிசை மன்னர்’, ‘குரலரசர்’, ‘டாக்டர்’ பட்டம் போன்ற பல்வேறு பட்டங்களையும் பெற்றுள்ளார்.

சினிமா பாடல்களை தவிர பக்தி பாடல்களிலும் உச்சம் தொட்ட இவர், மிக சிறந்த முருகபக்தர் ஆவார். கிட்டத்தட்ட 2500 பக்தி பாடல்களை பாடி இன்றும் நம்மை பரவசத்தில் ஆழ்த்திவரும் இவரது பாடல்களில், உள்ளம் உருகுதய்யா முருகா… கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்… சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா… போன்ற முருகனை உருகிப்பாடும் பாடல்கள் காற்றில் நிறைந்து முருகன் புகழை இன்றும் பாடி கொண்டிருக்கிறது. தனிபட்ட வாழ்க்கையை பொறுத்தவரை டி.எம். சௌந்தரராஜன், தனது 24வது வயதில், மார்ச் 28 ஆம் தேதி, 1946 ஆம் ஆண்டு , சுமித்ரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று
மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர்.

பாடகர் திலகம்’, சிங்கக் குரலோன்’, ‘இசை சக்கரவர்த்தி’, இசைக்கடல்’, ‘எழிலிசை மன்னர்’, ‘குரலரசர்’, என்று பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் இவருக்கு மத்திய அரசு 2003ம் ஆண்டு “பத்மஸ்ரீ”விருதளித்து கவுரவித்தது. மேலும் தமிழக அரசின் “கலைமாமணி உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ள இவர், தான் பாடும் பாடலின் பொருளை அறிந்த பின்னரே பாடும் வழக்கமுடையவர். அதனால் லட்ச ரூபாய் கொடுப்பதாக சொன்னாலும் சுருதி விலகி பாட சம்மதிக்கவே மாட்டாராம் டி.எம்.எஸ்.

2010ல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் “செம்மொழியான தமிழ்மொழியாம்” என பாடியதுதான் இசையுலகில் டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடல். தன் தனித்துவமான குரலால் வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் பாடல்களை இசையுளகிற்கு கொடையாக அளித்த டி.எம்.எஸ் 2013-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி அவர் காலமானார். 3 தலைமுறையினரை தன் இனிய குரலால் மகிழ்வித்த ‘மதுரை மாங்குயில்’ டி.எம்.எஸ்ஸின் புகழ் தமிழர்கள் காதுகள் இல்லாது பிறக்கும் காலம் வரை நீடித்து நிலைக்கும்.

தமிழ் இசை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய இவருக்கு இன்று நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்வதில் பெருமைகொள்வோம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தாராபுரத்தில் பரபரப்பு.!! பாஜக-இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் இடையே மோதல்..!!

Web Editor

கர்நாடகாவில் பாஜக எதிர்ப்பு அலை; காங்கிரசின் வெற்றி நாட்டிற்கு தேவை -நியூஸ்7 தமிழுக்கு ஜோதிமணி எம்பி பிரத்யேக பேட்டி!

Web Editor

ரெப்போ விகிதம் அதிகரிப்பு…வீட்டுக்கடன் வட்டியில் என்ன மாற்றம் ஏற்படும்?

Web Editor