விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சொத்துக்காக தாய் தந்தை மற்றும் தம்பியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகனுக்கும் அவரது மனைவிக்கு தூக்கு தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திண்டிவனத்தைச் சேர்ந்த ராஜி, அவரது மனைவி கலைச்செல்வி, மகன் கவுதம் ஆகியோர் கடந்த 2019ம் ஆண்டு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் ஏசி வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி அவர்கள் உயிரிழந்ததாக அவரது ராஜியின் மற்றொரு மகன் கோவர்த்தனன் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணை முடிவில் சொத்துக்காக, பெற்றோர் மற்றம் தம்பி ஆகிய 3 பேரையும் வெடிகுண்டு வீசி கொலை செய்துவிட்டு, கோவர்த்தனனும் அவரது மனைவி காயத்ரியும் நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், கோவர்த்தனனும், தீப காயத்ரியும் குற்றவாளிகள் என இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. பின்னர், தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 3 பேரை கொலை செய்த தம்பதிக்கு தலா 4 தூக்கு தண்டனைகள், தலா 2 ஆயுள் தண்டனைகள் மற்றும் தலா 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.








