மே 1 முதல் மூணாறு மலர் கண்காட்சி – ஏற்பாடுகள் தீவிரம்!

கேரளா மாநிலம் மூணாறில் அரசு சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் மலர் கண்காட்சி இந்தாண்டு மே1ம் தேதி தொடங்குகிறது. தமிழக-கேரளா எல்லையான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மூணாறு. மலைவாழ் இடங்களை…

கேரளா மாநிலம் மூணாறில் அரசு சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் மலர் கண்காட்சி இந்தாண்டு மே1ம் தேதி தொடங்குகிறது.

தமிழக-கேரளா எல்லையான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மூணாறு. மலைவாழ் இடங்களை விரும்பும் சுற்றுலாப்பயணிகளின்
முதல் தேர்வாக உள்ள மூணாறுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வர். மேலும் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல்,மே மாதங்களில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டுக்கான சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறும் மலர் கண்காட்சி வருகிற மே1ம் தேதி தொடங்கி மே 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. மூணாறு பாலாற்றின் கரையிலுள்ள தாவரவியல் பூங்காவில் நடைபெறும் இம்மலர் கண்காட்சியில் கிட்டதட்ட 1500 மலர்கள் காட்சிபடுத்தப்பட உள்ளன.

பார்வையாளர் கட்டணமாக சிறியவர்களுக்கு 35 ரூபாயும்,பெரியவர்களுக்கு 60 ரூபாயும் வசூலிக்கப்பட உள்ளன.மேலும் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.எட்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவில் மேலஸ்டோமா, இம்பேப்பன்ஸ், மட்னோலியா, கிராண்டிபோரா, மக்னோலியா, லில்லி ப்ளோரா உள்ளிட்ட பல்வேறு ரகங்களை சேர்ந்த ரோஜாக்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

மேலும் 31 வகையான அஷ்லியா,7வகையான கமேலியா மலர்களும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. கடந்தாண்டு மலர் கண்காட்சியை சுமார் 1.5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்த நிலையில் இந்தாண்டு 2லட்சம் பயணிகளுக்கு மேல் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.