மும்பையில் கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி மையங்கள் மே 2ம் தேதி வரை மூடப்படுவதாக மும்பை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மே 2ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்குகிறது. இந்நிலையில் மும்பையில் இயங்கி வரும் 136 தடுப்பூசி மையங்களிலிருந்த 70,000 மருந்து குப்பிகள் 29ம் தேதி தீர்ந்து விட்டதால் தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தால் தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என மும்பை நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டாலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை தரப்படும் எனவும் கூறியுள்ளது.
கொரோனா தடுப்பூசி வந்தடைந்ததும் 18 வயதிற்கு மேற்பட்டோர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 227 அரசு மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மேலும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், குறித்த நேரத்தில் இரண்டாம் தவணை செலுத்த இயலாவிட்டாலும் அச்சப்படத் தேவையில்லை. நிதானமாகச் செலுத்திக்கொள்ளலாம் என மும்பை கூடுதல் நகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே தெரிவித்துள்ளார்.
மும்பையில் இதுவரை 19.51 லட்சம் முதல் தவணை தடுப்பூசியும், 4.76 லட்சம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







