ஆண்டுக்கு ரூ.3 முதல் 4 கோடி வரை டேர்ன்ஓவர், செலவுக்கு ஏற்ற வருமானம், அரசு மானியம் என பலமடங்கு லாபம் தரக்கூடிய ஆர்க்கிட் மலரை சாகுபடி செய்வது எப்படி, அதன் வளர்ப்பு முறைகள் என்னவென்று தற்போது காணலாம்.
இந்தியாவில் ஆர்க்கிட் (Orchid) சாகுபடி மற்றும் வணிகத்திற்கு சமீபத்திய ஆண்டுகளில் மவுசு பெருகி வருகிறது. ஆர்க்கிட் சாகுபடியில் அதிக முதலீடு மற்றும் பராமரிப்பு தேவைப்பட்டாலும், சந்தையில் அதன் விலை மற்ற பூக்களை விட அதிகமாக இருந்து வருகிறது.
முதலில் ஆர்க்கிட் மலர்களை பற்றி பார்க்கலாம்…
வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் ஆர்க்கிட் செடி, நறுமணம் மற்றும் நீண்ட நாட்கள் வாடாததன்மை என பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளது. இப்பூக்கள் மிகப்பெரிய உணவு விடுதிகள், திருவிழாக்களில் அலங்கார பூக்களாக பயன்படுத்தப்படுகிறது.
ஆர்க்கிட் மலர் பொதுவாக மற்ற மலர்களை போல் மண்ணில் வளராது. அவை மரங்களின் பட்டைகளிலும், மற்ற தாவரங்களின் மேற்பரப்பிலும், செழித்து வளரும் தன்மை கொண்டது. ஆர்க்கிட் மலர் சாகுபடி செய்ய விரும்புபவர்கள் பசுமைக்குடில் (Polyhouse) அமைப்பது சிறந்தது என கூறப்படும் நிலையில், அதற்காக அரசு சார்பில் மானியமும் வழங்கப்படுகிறது.
சரி ஆர்க்கிட் செடிகளை தமிழ்நாட்டில் சாகுபடி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்…
ஆர்க்கிட் மலர்கள், வெப்பமண்டலம், மிதவெப்ப மண்டல காலநிலையில் செழித்து வளரக்கூடிய தன்மைப்பெற்றது. இந்தியாவில் பல்வேறு வகையான ஆர்க்கிட் இனங்கள் உள்ளன. அவற்றில் Dendrobium, Vanda, Cymbidium மற்றும் Phalaenopsis போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது.
இதில் டென்டரோபோரியம் (Dendrobium), வெப்பமண்டல ஆர்க்கிட் இனங்கள் என்பதால் சென்னை மற்றும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் கடலோர பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்புடையதாக உள்ளது என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், இவை பசுமைக்குடிலில் 75% பசுமை நிழலில், 70% முதல் 80% காற்றின் ஈரப்பதம் இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும் என்றும், வெப்பநிலையை பொறுத்தவரையில் 18 முதல் 28ºC மட்டுமே இருத்தல் வேண்டும் எனவும் பல்கலைக்கழகம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மலர்கள் தாவர திசு வளர்ப்பு முறையில் வளர்க்கபடுகிறது. வளர்வதற்கு மண் தேவைப்படாத நிலையில், பூச்சட்டிகளில் கரி, செங்கல் ஓடுகள், தேங்காய் உமி மற்றும் ஃபைபர் போன்ற உடைந்த துண்டுகள் மூலம் வளர்க்கப்படுகிறது. ஆர்க்கிட் செடியினை இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வேறு பூச்சட்டிக்கு மாற்ற வேண்டும். புதிய வேர்கள் வெளிப்படும் போதே மறுபூச்சட்டி செய்துவைத்து கொள்வது சிறந்தது.
பூக்களின் ஆயுட்காலத்தை பிஎ 25 பிபிஎம் கரைசலில் பூகம்புகளை 24 மணி நேரம் நனைப்பதன் மூலம் 13 முதல் 24 நாட்களாக பூக்கள் வாடாமல் ஆயுளை நீடிக்க முடியும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுவதுமாக மலர்ந்த மலர்கள், விற்பனையாளர் அடையும் முன் தளர்வுற்றுவிடும் என்பதால் அறுவடையானது, 75 சதவீதம் மொட்டுகள் திறந்த நிலையில் இருக்கும் பொழுதே மேற்கொள்ளப்படுகின்றன.
இம்மலர்களின் சாகுபடி, கன்னியாகுமரி, கேரளா பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. இதன் பராமரிப்பு முறை அதிக செலவினத்தை ஏற்படுத்துவதால், இம்மலர்கள் அனைத்து தரப்பு விவசாயிகளும் சாகுபடி செய்ய ஏற்றதாக இருப்பதில்லை. இருப்பினும் சந்தையில் இப்பூக்களுக்கு நல்ல மவுசு இருப்பதால், ஆர்க்கிட் மலரை சாகுபடி செய்ய விவசாயிகள் மத்தியில் ஆர்வம் மேலோங்கிவருகிறது.
இதை பற்றிய உங்கள் கருத்துகளை கீழே கமெண்ட் செய்யுங்கள்.. மேலும் இது போன்ற சுவாரஸ்யமான விவசாய பதிவுகளை நியூஸ்7 தமிழ் அக்ரி, Youtube சேனலை subscribe செய்து,Bell button-ஐ கிளிக் செய்யுங்கள்…..










