அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் முக்தர் அப்பாஸ் நக்வி

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவியை முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளார். முக்தர் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. திரிபுரா பேரவை மூலம் மாநிலங்களவை உறுப்பினராக…

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவியை முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளார்.

முக்தர் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. திரிபுரா பேரவை மூலம் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த மாணிக் சகா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதலமைச்சராகிவிட்டதால், அந்த இடம் காலியாக உள்ளது. எனவே, அந்த இடத்திற்கு முக்தர் அப்பாஸ் நக்வி தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது. எனினும், அவர் மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் உள்ள ஒரே இஸ்லாமியரான முக்தர் அப்பா் நக்வி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

பிரதமர் மோடியையும், கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டாவையும் சந்தித்த முக்தர் அப்பாஸ் நக்வி, அதனையடுத்தே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முக்தர் அப்பாஸ் நக்வி ஆளுநராக்கப்படலாம் அல்லது குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

64 வயதாகும் முக்தர் அப்பாஸ் நக்வி, வாஜ்பாய் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தவர்.

நாடாளுமன்ற அனுபவம் மிகுந்தவர் என்பதால், அவர் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கைய்யா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது.

இதனால், புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 19ம் தேதி கடைசி நாள் என தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், வரும் ஆகஸ்ட் 6ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவதற்கே வாய்ப்பு உள்ளதால், பாஜக யாரை வேட்பாளராக நிறுத்தப்போகிறது என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்தர் அப்பாஸ் நக்வி மட்டுமல்லாது, கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான், முன்னாள் மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் ஆகியோரின் பெயர்களும் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு அடிபடுவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.