தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் ஒன்றியங்களுக்கான உட்கட்சி தேர்தல் வருகிற 10-ம் தேதி தொடங்கும் என தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.
தேமுதிக உள்கட்சி தேர்தல் தொடர்பான தேமுதிக உட்கட்சி தேர்தல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2017ம் ஆண்டு கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் தேமுதிகவில் அமைப்பு தேர்தல் குக்கிராமங்களில் உள்ள ஊராட்சி வாரியாக பூத் கிளையில் தொடங்கி ஊராட்சி, பேரூர் வார்டு, நகர வார்டு பூத் கிளை, நகர வார்டு, மாநகராட்சி வட்டங்களில் உள்ள பூத் கிளை, பேரூராட்சி, நகராட்சி, ஒன்றியம், மாவட்டம், தலைமை என அனைத்து பகுதிகளில் உள்ள கமிட்டிகளுக்கும் தேர்தல் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று முந்தைய தினம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜயகாந்தின் 70வது பிறந்த நாளை தேமுதிக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட முடிவெடுக்கப்பட்டது. மேலும், பிறந்த நாளிற்கு முன்பாகவே உட்கட்சி தேர்தலை நடத்தி முடித்து தேர்தலில் வெற்றி பெறும்
நிர்வாகிகள் பிறந்தநாளின் போது விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கட்சியின் துணை செயலாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி, அவைத்தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், உட்கட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை தேமுதிக தலைமை இன்று வெளியிட்டுள்ளது. அதில், உட்கட்சி தேர்தலுக்காக தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் அனைத்து ஒன்றியங்களில் உள்ள ஒன்றிய ஊராட்சி பூத் கிளைகள், பேரூராட்சி வார்டு கிளை, நகராட்சி வார்டு பூத் கிளை, நகராட்சி வார்டு, மாநகராட்சி வட்டங்களில் உள்ள பூத் வாரியாக கிளைகளுக்கு பூத் கிளை செயலாளர், பூத் அவை தலைவர், பூத் பொருளாளர், இரண்டு பூத் துணைச் செயலாளர்கள், இரண்டு பிரதிநிதிகள், 2 பூத் செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட ஒன்பது கிளை நிர்வாகிகள், ஊராட்சி, ஊராட்சி செயலாளர், இரண்டு துணை செயலாளர்கள், மாநகராட்சி வட்டத்திற்கு ஒரு வட்ட செயலாளர், அவைத்தலைவர், பொருளாளர், நான்கு துணை செயலாளர்கள், நான்கு பகுதி பிரதிநிதிகள் கொண்ட பதினோரு பேர், இவை அனைத்திற்கும் முதல் கட்ட அமைப்பு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட அமைப்பு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேமுதிக தலைமை தெரிவித்துள்ளது.
– இரா.நம்பிராஜன்








