எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முன்னதாகவே ஓய்வு பெற்றுவிட்டார், இன்னும் ஒராண்டு காலம் இந்திய அணிக்காக அவர் விளையாடி இருக்கலாம் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் மனம் திறந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகளுக்கு பிறகும் ஐபிஎல்-இன் முக்கிய சொத்தாக தோனி விளங்குவதாக கூறியுள்ளார். அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டுமுறை பட்டம் வாங்கி கொடுத்ததாக பாராட்டியுள்ளார். அதிலும் 2023 ஐபிஎல் வெற்றி அளப்பரிய சாதனை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு விளையாடிய போது ஏழாவது நபராகவோ, எட்டாவது நபராகவோ தோனி பேட் செய்ய வந்த போதும் ஸ்டிரைக் ரேட் 181 வைத்திருப்பதாகவும், இது அவரின் சிறந்த சாதனை எனவும் கூறியுள்ளார். தோனி போதுமான பந்துகளை எதிர்கொள்ளவில்லை, ரன்களை குவிக்கவில்லை ஆனால் அவர் பேட்டிங் செய்ய வரும் போதெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தி தனது ஃபினிஷர் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
தோனி நினைத்திருந்தால் 2020-க்கு பிறகும் இந்திய அணிக்காக விளையாடி இருக்க முடியும் , ஆனால் சரியான நேரத்தில் ஓய்வு முடிவை எடுத்ததால் தான் தோனி தோனியாக இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தோனிக்கு எந்த அணியை கொடுத்தாலும் அதை இறுதி போட்டிவரை அழைத்து சென்று வெற்றியடைய வைப்பார் என புகழாரம் சூட்டினார். கிரிக்கெட்டில் இருந்து தோனி விலகினாலும் சி.எஸ்.கே அணியின் வழிகாட்டியாகவோ, தலைவராகவோ அல்லது ஏதோ ஒரு வகையில் அந்த அணியோடு இணைந்திருப்பார் என வாசிம் அக்ரம் தெரிவித்தார்.







