மத்திய பிரதேச மாநிலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியவருக்கு அம்மாநில சுகாதாரத்துறை 40 ஆயிரம் பக்கங்களில் பதில் அளித்து அதிர்ச்சி அளித்திருக்கிறது.
இந்தூரை சேர்ந்தவர் தர்மேந்திர சுக்லா. இவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கொரோனா காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் தொடர்பான விவரங்களை அளிக்குமாறு தலைமை சுகாதார அதிகாரியிடம் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் ஓரு மாதமாகியும் பதில் அளிக்காததால் மேல்முறையீடு செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட மேல்முறையீட்டு அதிகாரி கேட்ட விவரங்களை கட்டணம் ஏதும் இன்றி அளிக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து விவரங்களை பெற்றுக்கொள்ளுமாறு தர்மேந்திர சுக்லாவிற்கு தகவல் வந்தது. தனது காரில் அலுவலகம் சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவர் கேட்டிருந்த பதில்களை சுமார் நாற்பதாயிரம் பக்கங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அதனை பார்த்து சற்று மிரண்ட அவர், பதில் ஆவணங்களை தனது காரில் (ஓட்டுநர் இருக்கையை தவிர)அடுக்கி வீட்டுக்கு கொண்டு சென்றார்..
ஆர்டிஐ மூலம் ஒருவர் கேட்ட விவரங்கள் அடங்கிய பதிலுக்கு கட்டணமாக, பக்கம் ஒன்றுக்கு ரூ.2 வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால் கேட்ட விவரங்கள் ஒரு மாதத்திற்குள் அளிக்காவிட்டால் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. தர்மேந்திர சுக்லா கேட்ட விவரங்கள் ஒரு மாதம் கழித்து தரப்பட்டதால் அவர் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







