கால்வாயை பலப்படுத்தும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், வளையமாதேவியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தில் தற்போது விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. அதாவது என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிக்கு பரவனாற்றுக்கு என்எல்சி சுரங்க நீரை எடுத்து செல்லும் வகையில் இந்த பணி நடக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு இந்த பணி தொடங்கியது. அப்போது வளையமாதேவி பகுதியில் கால்வாய் வெட்டும் பணி ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் துவங்கப்பட்டது. இரண்டு மாதங்களில் கதிர் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிற்சிகள் பொக்லைன் இயந்திரங்களால் அழிக்கப்பட்டு கால்வாய் வெட்டப்பட்டன.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூலை 28-ஆம் தேதி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், பாமகவினர் என்எல்சியை முற்றுகையிட சென்றனர். அப்போது போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்தது. போலீஸ் வாகனங்கள் மீது கல் வீசப்பட்டது. இதையடுத்து தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டு வீசி போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், அன்று மாலையே விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் இரண்டு சிறார்கள் உள்பட 26 பேரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இரண்டு சிறார்கள் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர். மேலும், 26, 28 தேதிகளில் பதிவுசெய்யப்பட்ட கல்வீச்சு வழக்குகளில் 11 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். என்.எல்.சி.,முற்றுகை போராட்டம் தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே போராட்டத்தால் தற்காலிகமாக தடைப்பட்ட என்எல்சி கால்வாய் அமைக்கும் பணிகள் வளையமாதேவியில் மீண்டும் தொடங்கி நடைபெற்றன. தற்போது அந்த பணி நிறைவுற்றதால், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்போடு கால்வாயை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.







