”தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியை தத்தெடுத்து உள்ளேன்”

நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் திட்டங்களை செயல்படுத்த தூத்துக்குடி மாவட்டம் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியை தத்து எடுத்து இருப்பதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம்…

நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் திட்டங்களை செயல்படுத்த தூத்துக்குடி மாவட்டம் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியை தத்து எடுத்து இருப்பதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் தெற்கு இலந்தை குளம் ஊராட்சியில் ஆத்திகுளம் கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய கனிமொழி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த காரணத்தால் அவர் உள்ளாட்சி துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறினார்.

உள்ளாட்சியில் பல இடங்களில் பதவிக்கு வரக்கூடிய பெண்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளை பயன்படுத்த முடியாமல் அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஆண்கள் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு அவர்களை செயல்பட விட முடியாத நிலை உள்ளது. ஆனால் இந்த ஊராட்சி மன்ற தலைவர் அதையெல்லாம் தாண்டி செயல்பட்டு வருகிறார் என்றார்.

மேலும் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்வதாக தெரிவித்தார். மேலும், இந்தாண்டு தனது நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியில் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியை தத்து எடுத்து உள்ளதாகவும் அதற்கு முக்கியமான காரணம் இந்த ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தான் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த கிராம சபை கூட்டத்தில் மக்கள் தாங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து கூறினர். அப்போது தெற்கு இலந்தை குளத்தினை சேர்ந்த சங்கரி என்ற பெண்மணி கடந்த 17ந்தேதி தனது வீட்டில் 6 அரை பவுன் தங்க நகை திருடு போய்விட்டதாகவும், போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கண்ணீர் விட்டு அழுதார். இதையடுத்து அங்கிருந்த கோவில்பட்டி டி.எஸ்.பி உதயசூரியனை அழைத்து விரைந்து குற்றவாளியை கண்டுபிடித்து நகையை மீட்டு ஒப்படைக்கும்படி அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.