மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை எப்போது பயன்படுத்தப் போகிறீர்கள் என மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளை ஊனமுற்றோர் என முதலில் எல்லோரும் அழைத்து வந்தனர். “ஊனமுற்றவர்கள் உடலளவில் ஊனமுற்றவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள் உள்ளம் ஊனமுற்று இருக்கக் கூடாது” என்று சொல்லி மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி. அத்துடன், மாற்றுத் திறனாளிகளுக்குத் தனி துறையையும், நல வாரியத்தையும் உருவாக்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் சில கேள்விகளை முன்வைத்தார். அதில், “மாற்றத்திறனாளிகளுக்கான புதிய தேசிய கொள்கை மற்றும் ஒன்றிய அரசுத் துறையின் பெயர்கள், புத்தகங்கள், சட்ட முன்வரைவு உள்ளிட்டவைகளில், ஊனமுற்றோர் என்ற வார்த்தையை மாற்றுத்திறனாளி என்று மாற்ற ஒன்றிய அரசு முன்மொழிகிறதா என்றும் அவ்வாறெனில் அத்தகைய உத்தரவு எப்போது பிறப்பிக்கப்படும் என்ற விவரங்களை தெரியப்படுத்தவும்” என்று கேட்டுள்ளார்.
மேலும், மாற்றத்திறனாளிகளுக்கான புதிய தேசிய கொள்கை குறித்து கலந்தாய்வு முறைக்கான வரைவு, சைகை மொழி மற்றும் பிராந்திய மொழிகளில் இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் பெருமளவில் அக்கலந்தாய்வில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளதை ஒன்றிய அரசு அறிந்துள்ளதா என்றும், அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும் என கேள்வி எழுப்பினார். முதலில் சைகை மொழி மற்றும் பிராந்திய மொழிகளில் வரைவுகள் வழங்கப்படாததற்கான காரணம் என்ன என்றும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிராந்திய மொழி பேச்சாளர்கள் பயன்பெறும் வகையில் அத்தகைய வரைவுகள் வழங்கப்படுமா என்றும், அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும் என கேள்வி எழுப்பினார்.