சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம், ஆகஸ்ட் 11 அன்று அமேசான் Prime OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சரிதா, அதிதி ஷங்கர், யோகி பாபு, சுனில், மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளார். இந்தப் படம் தமிழில் மாவீரன் என்ற பெயரிலும் தெலுங்கில் மஹாவீரடு என்ற பெயரிலும் வெளியானது.
பத்திரிகையில் கார்டூன் வரையும் சத்யா என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். எந்த ஒரு பிரச்னைக்கும் செல்லாமல் அமைதியாக வாழ விரும்பும் சத்யா தனக்கு மட்டும் கேட்கும் ஒரு மனக்குரலின் பிடியில் மாட்டிகொண்டு வெளிவருவதே படத்தின் கதை.
படத்தை பார்த்த பல ரசிகர்கள் படம் முழுக்க சிரிப்பு வெடிகளாக உள்ளதாகவும் கொடுத்த காசுக்கு நல்ல படத்தை பார்த்த உணர்வு இருந்ததாகவும் தெரிவித்திருந்தனர். மேலும், படத்தின் முதல் பாதி போனதே தெரியவில்லை என்றும் இரண்டாம் பாதி சற்றே நீளமாக இருப்பதாகவும் கூறினர்.
சிவகார்த்திகேயனின் திரைப்படங்களுக்கு குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. இதனால் விடுமுறை நாட்களில் குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு படையெடுக்க தொடங்கினர். முதல்நாள் வசூலாக ரூ10.2 கோடி எனக் கூறப்பட்டது. இப்படம் வெளியான 11 நாள்களில் உலகளவில் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனிடையே, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த மாவீரன் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,மாவீரன் திரைப்படம், ஆகஸ்ட் 11 அன்று அமேசான் Prime OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







