சித்திரை திருவிழா: நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 40 இடங்களில் நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது சித்திரைத் திருவிழாவிற்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அதிமுக எம்எல்ஏ…

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 40 இடங்களில் நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது சித்திரைத் திருவிழாவிற்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, சித்திரை திருவிழாவுக்காக 40 இடங்களில் நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், நோய் தொற்று பரவாமல் இருக்க தூய்மைப் பணியாளர்களை அதிகளவில் நியமித்து, குப்பைகளை உடனுக்குடன் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 40 இடங்களில் 40 கழிப்பறை வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சித்திரைத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட அமைச்சர்கள் களத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் சேகர்பாபு, பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்து, தரிசனத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முதலமைச்சர் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அழகர் ஆற்றில் இறங்கும்போது தேவையான தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் சேகர்பாபு, அனைவருக்கும் முறையாக அழைப்பு விடுக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனல் நேரடியாக ஒளிபரப்புகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.