அன்பு தான் பலவீனம் என்றால், இந்த உலகில் மிகச்சிறந்த பலசாலி நீ தான் என்று கூறியது மட்டுமின்றி, வாழ்ந்து காட்டியவர் அன்னை தெரசா…
புன்னகை மாறாத மலர்ந்த முகம்… அமைதியாக நோபல் பரிசு வென்றவர்… கருணையால் பலரை கைப்பாற்றியவர்…. அன்பால் அனைவர் மனதையும் கொள்ளையடித்தவர்… என்று இவரைப் பற்றி கூறிக் கொண்டே போகலாம். நிக்கோலாய் போஜோஜியூ, ட்ரெனபிள் போஜோஜியூ தம்பதிகளுக்கு 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ந் தேதி மாசிடோனியா நாட்டில் உள்ள ஸ்கோப்பியே நகரில் 3-வது குழந்தையாக அன்னை தெரசா பிறந்தார்.
தெரசாவிற்கு பெற்றோர் வைத்த பெயர் ‘ஆக்டேன் கென்யா போஜோஜியூ’. ஆனால் அடுத்த நாளே கிறிஸ்துவ முறைப்படி ‘தெரசா’ என பெயர் சூட்டப்பட்டது. தெரசாவிற்கு 8 வயது இருக்கும் போதே அவரது தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட அதன் பின் 18 வயது வரை அம்மா மற்றும் சகோதரர்கள் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.
குழந்தையில் இருந்தே கிறிஸ்துவ மத நம்பிக்கையில் மிகவும் ஆர்வம் கொண்டதால் தனது 18-வது வயதில் அயர்லாந்து நாட்டில் உள்ள சிஸ்டர்ஸ் ஆஃப் லொரேட்டோவில் அருட்சகோதரியாக தன்னை இணைத்துக் கொண்டார் அன்னை தெரசா. அதன் பின்னர் கிறிஸ்தவ அமைப்பு மூலம் 1929-ம் ஆண்டு முதன் முதலில் இந்தியாவிற்கு வந்தார்.
டார்ஜிலிங் பகுதிகளில் கிறிஸ்துவ பணிகளில் ஈடுபட்ட அதே நேரத்தில் வங்காள மொழியை பேசவும் , எழுதவும் கற்றுக்கொண்டு பள்ளிகளில் ஆசிரியரியராகவும் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரமாக இருந்த கொல்கத்தா நகரைச் சுற்றி இருந்த பகுதிகளில் நிலவிய வறுமைகளை பார்த்து ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்று தனது ஆசிரியர் பணியை விடுத்து 1946-ம் ஆண்டு செவிலியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து செவிலியர் பணியையும் நன்கு கற்றுத் தேர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து 1949-ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள மோதிஜில் பகுதியில் பள்ளி ஒன்றை தொடங்கி குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கத் தொடங்கினார் அன்னை தெரசா. அதனைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைமை பேரவை மூலம் நிதியுதவி பெற்று கொல்கத்தா காளிகட் பகுதியில் நிர்மல் ஹரிதை என்ற கிறிஸ்துவ அமைப்பைத் தொடங்கி குழந்தைகள், ஏழைகள், நோயாளிகள் என அனைவருக்கும் சேவை செய்ய தொடங்கினார்.
அதன் பிறகு 1982-ம் ஆண்டு பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போது, அங்கு சிக்கித் தவித்த 37 குழந்தைகளுக்காக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை பாதுகாப்பாக மீட்டார் அன்னை தெரசா. இவ்வாறு வறுமை, பஞ்சம், பூகம்பம், போர் என பாதிக்கப்படும் மக்களை நேரில் சந்தித்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார் அன்னை தெரசா.
நோயால் பாதிக்கப்படும் முதியோர்கள், குழந்தைகளின் கஷ்டங்களை போக்குவதற்காக பொதுமக்களிடம் காலை முதல் மாலை வரை நிதியுதவி (உண்டியல்) வசூல் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார் அன்னை தெரசா. இப்படி ஒரு நாள் வசூல் செய்து கொண்டிருக்கும் போது ஒரு கடைக்காரரிடம் உதவி கேட்டுயிருக்கிறார். அதற்கு அந்த கடைக்காரர் உமிழ்நீரை தெரசாவின் கையில் உமிழ்ந்துள்ளார்.
அதற்காக அன்னை தெரசா கோபப்படாமல் இந்த உமிழ் நீரை நான் வைத்துக் கொள்கிறேன். அங்கு நோயால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என கேட்டுள்ளார். அதனை கேட்டு கூனிக் குறுகி நின்ற கடைக்காரர் மன்னிப்பு கேட்டு அவரால் முடிந்த உதவிகளை செய்துள்ளார்.
அன்னை தெரசா 40 ஆண்டுகளுக்கு மேலாக மனித குல சேவைகளை அமைதியுடனும் அன்புடனும் தொடர்ந்து செய்து வந்ததால் அவரைத் தேடி விருதுகளும் பல குவிந்தன. 1962-ம் ஆண்டு சேவைகளை பாராட்டி இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கியது. அமைதிக்காக நோபல் பரிசு, பாரத ரத்னா மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து பல உயரிய விருதுகளைப் பெற்றார் அன்னை தெரசா.
அன்னை தெரசா பிறந்தநாள்#MotherTeresa | #HBDMotherTeresa | #HappyBirthday | #Birthday | #Nun | #SocialWork | #Love | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/zrKka6Y7W0
— News7 Tamil (@news7tamil) August 26, 2023
அமைதிக்காகவும், அன்பு ஒன்றே பெரிது என வாழ்ந்த அன்னை தெரசா உடல் நிலை குறைவு காரணமாக 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி மேற்கு வங்க தலைநகரமான கொல்கத்தாவில் காலமானார். அவர் மறைந்தாலும், அவரது அளப்பரிய சேவை இன்றும் மக்கள் மத்தியில் மறையவில்லை.








