அன்பின் வடிவம் அன்னை தெரசா

குளிர்ந்த பார்வை, மலர்ந்த புன்னகையால் மிளிர்ந்த முகம் என கருணையின் வடிவமாய், கடவுளின் மறு உருவமாய் திகழ்ந்தவர் அன்னை தெரசா. 1910 ஆகஸ்டு 26 ல் தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்போனியாவில் நிக்கல் நிகோலா…

குளிர்ந்த பார்வை, மலர்ந்த புன்னகையால் மிளிர்ந்த முகம் என கருணையின் வடிவமாய், கடவுளின் மறு உருவமாய் திகழ்ந்தவர் அன்னை தெரசா.

1910 ஆகஸ்டு 26 ல் தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்போனியாவில் நிக்கல் நிகோலா – பொயாஜியூ திரானி பொஜனாக்கா தம்பதியருக்கு மகளாய் பிறந்தவர்தான் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. எட்டு வயதிலேயே தந்தையை இழந்து, அன்னையின் அரவணைப்பில் வளர்ந்ததாலோ என்னவோ பின்னாளில் உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும், தன்னையே அன்னையாய் பாவித்து, அன்பை கிள்ளியல்ல அள்ளி கொடுத்து, அன்னை என்ற அடைமொழியை தன் அடையாள மொழியாக்கினார்.

கிறிஸ்துவ மறைப் பணியாளர்களாலும், அவர்களின் சேவைகளாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டு தன் 12 வயதில் சமூக சேவையாற்றத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஏழை எளியவர்கள், உடல் ஊனமுற்றோர், பள்ளிக் குழந்தைகளுக்கு உதவிச் செய்து வந்தவர் அதோடு நின்றுவிடாமல் , தேவாலயங்களை சுத்தம் செய்தும் வந்தார்..

” தாய் சொல்கின்ற வார்த்தைகளெல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா “

என்ற வரிகளுக்கு உயிர் கொடுத்தவர். ஆம், மருத்தவமனைகளுக்குச் சென்று அங்குள்ள நோயாளிகளுக்கு தன் ஆறுதலான வார்த்தைகளால் அனைவருக்கும் மருந்தாகிப் போனார். பிறகு முழுவதுமாக மக்களுக்கு சேவையாற்ற முடிவுசெய்து தனது 18 வயதில் லொரெட்டோ சகோதரிகளின் சபையில் மறைப் பணியாளாராகச் சேர்ந்து அதன்பின் 1928 அக்டோபர் 12ல் ராத் ஃபர்ன்ஹாம் என்ற அயர்லாந்தின் சிஸ்டர்ஸ் ஆஃப் லொரெட்டோ என்ற கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் சேர்ந்து சேவையில் ஈடுபட்டார்.

இந்தியாவில் மேற்கு வங்கத்தில் கத்தோலிக்க சபையில் சேர்ந்த இவர் பிரான்ஸ் நாட்டின் சகோதரி தெரசாவின் சேவையால் ஈர்க்கப்பட்டு தன் பெயரை தெரசா என மாற்றிக்கொண்டு மானுட குலத்திற்கு மகத்தான சேவையாற்றினார். இன்று காய்ச்சல் வந்தாலே பத்தடி தூரம் தள்ளிநிற்கும் மனிதர்களிடையே அன்று காசநோய் வந்தபோதும் அவர்களை தன் கருணை மழையால் அரவணைத்தவர்.

தொழுநோய், எச்ஐவி போன்ற நோய்களின் பெயரைக் கூட உச்சரிக்க யோசிக்கும் உலகத்தார் வாய்களுக்கும் பூட்டு போட்டது பிறர் எச்சிலையும் தன் இன்முகத்தோடு பெற்று இல்லாதவர்களுக்காகவும், இயலாதவர்களுக்காகவும் இவர் ஈன்ற உதவிகள் பல….பிறரை நேசிக்க மட்டுமே கற்று கொடுத்த இந்த தாய் உள்ளம் இன்றோடு தரணியில் பிறந்து 112 ஆண்டுகள் ஆகிறது. இறைவனடிச் சேர்ந்த உம் கருணை கரங்களைப்பற்றியே இந்த உலகம் உயிர்வாழ்கிறது.

– தனலட்சுமி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.