முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தருமபுரியைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பழனியப்பன் அமைச்சராக இருந்த போது சட்டமன்றத்தில் அவரது பேச்சை ஆர்வமுடன் கேட்டவர்கள் நாங்கள். பழனியப்பனை திமுகவில் சேர்க்க எவ்வளவோ முயற்சி செய்தோம், யார் யாரையோ தூது விட்டோம். பின்னர் என்னுடைய வேண்டுகோள் மட்டுமல்ல திமுக தோழர்களின் வேண்டுகோளையும் ஏற்று பழனியப்பன் திமுகவில் இணைந்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளார் பழனியப்பன் எனவும், தற்போது அவரை பின்தொடர்ந்து ஏராளமானோர் திமுகவில் இணைந்துள்ளனர் என்றும் கூறிய மு.க.ஸ்டாலின், தருமபுரி மாவட்டத்தில் திமுக வலுவாக இல்லை என்று இனி யாரும் கூறமுடியாது எனவும் தெரிவித்தார்.
2011 – 16 அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக பதவி வகித்த பழனியப்பன், அதன்பிறகு தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார். அமமுகவை தினகரன் ஆரம்பித்த பிறகு அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த பழனியப்பன், துணை பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுகவில் இணைந்தார்.








