மத்திய அரசின் ஆதரவு காரணமாக இந்தியாவில் பொம்மை உற்பத்தி துரித கதியில் உயர்ந்துள்ளதாக அத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொம்மைகள் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் பலனாக, இந்தியாவில் பொம்மைகள் உற்பத்தி மிகப் பெரிய வளர்ச்சி பெற்றுள்ளதாக அத்துறையில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் 90 சதவீத பொம்மைகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்ததாகத் தெரிவித்துள்ள இந்திய பொம்மை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஷரத் கபூர், தற்போது அவற்றில் பெரும்பாலானவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகக் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது, வெளிநாட்டு ஆர்டர்களும் கிடைத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அளித்து வரும் ஊக்கமே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் பொம்மைகள் ஏற்றுமதி அதிகரித்து வருவதாகவும் இறக்குமதி குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ள பொம்மை தொழிற்சாலை உரிமையாளர் மனு குப்தா, தற்சார்பு பொருளாதாரம் உருவாகி வருவதையே இது காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தயாரிப்புகள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள மனு குப்தா, நமது நாட்டில் தற்போது மிகப் பெரிய அளவில் பொம்மைகளை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் 20 இருக்கும் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டிலேயே பொம்மைகள் தயாரிக்கப்படுவதற்கு மத்திய அரசு மிகப் பெரிய ஊக்கம் அளித்து வருவதாகத் தெரிவித்துள்ள டெல்லியைச் சேர்ந்த பொம்மை உற்பத்தியாளர் ராஜிவ் பத்ரா, நமது நாட்டிற்குத் தேவைப்படும் பொம்மைகளில் 80 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகக் கூறியுள்ளார். பல்வேறு ஊக்கத் தொகைகளை அளிப்பதன் மூலம் மத்திய அரசு மிகப் பெரிய ஆதரவை அளித்து வருவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.











