உலகம் கொண்டாடும் திருவிழா யோகா: பிரதமர் மோடி

உலகம் கொண்டாடும் திருவிழாவாக யோகா மாறிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடகாவின் மைசூர் மாநகரில் உள்ள அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட யோக விழாவில் பிரதமர் நரேந்திர…

உலகம் கொண்டாடும் திருவிழாவாக யோகா மாறிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடகாவின் மைசூர் மாநகரில் உள்ள அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட யோக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனாவல் உள்பட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த விழாவில் பங்கேற்று யோகாசனங்களை செய்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, யோகா ஒரு தனி நபருக்கானது அல்ல என்றும் அது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்குமானது என்றும் தெரிவித்தார்.

எனவேதான் இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்திற்கான கருப்பொருள் மனிதகுலத்திற்கான யோகா என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் நமது உடல் மற்றும் ஆன்மாவில் இருந்துதான் தொடங்குகிறது என தெரிவித்த பிரதமர், அந்த வகையில் நமக்குள் இருக்கும் அனைத்தையும் விழிப்புணர்வாக வைத்திருக்க உதவுவது யோகா என்றார்.

யோகா தனிநபருக்குள் அமைதியை கொண்டு வருவதாகவும் அந்த அமைதி அந்த தனி நபருக்கானது மட்டுமல்ல என்றும், அது நாட்டுக்கானது; உலகிற்கானது என தெரிவித்தார்.

எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்தாலும் சில நிமிடங்கள் தியானம் செய்தால் அது நமக்குள் தளர்வை ஏற்படுத்தும் என்றும் அதன்மூலம் நமது செயல்திறன் அதிகரிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

எனவேதான் நாம் யோகாவை கூடுதல் வேலையாக பார்ப்பதில்லை என்று அவர் தெரிவித்தார். யோகா தற்போது வாழ்க்கையின் அங்கம் அல்ல என்றும் அது வாழ்க்கை முறையாக மாறிவிட்டது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

உலகிற்கான இந்தியாவின் கொடை யோகா என குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, உலகின் திருவிழாவாக தற்போது யோகா மாறிவிட்டதாக பெருமிதம் தெரிவித்தார்.

சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டு கொண்டாட்டத்தில் நாடு இருக்கும் இவ்வேளையில், நாட்டின் 75 முக்கிய இடங்களில் யோகா தின கொண்டாட்டத்திற்கு ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் முன்முயற்சி காரணமாக ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி ஐநா அறிவித்தது. 2015ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி உலகின் முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.