ராஜ்ய சபாவில் ராஜா

திரை இசையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கும் இளையராஜாவிற்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கி மத்திய பாஜக அரசு கவுரவித்துள்ளது.  பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் மத்திய அரசின் பரிந்துரையின்…

திரை இசையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கும் இளையராஜாவிற்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கி மத்திய பாஜக அரசு கவுரவித்துள்ளது. 

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது வழக்கம். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் இந்த பதவியை ஏற்கனவே வகித்துள்ளனர்.

இந்நிலையில் மாநிலங்களவைக்கு புதிதாக 4 நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசை சாம்ராஜ்யம் நடத்தி மக்களை மகிழ்வித்து வரும் இசையமைப்பாளர் இளையராஜா, கேரளாவைச் சேர்ந்த முன்னாள் தடகள வீராங்கனையும், இந்தியாவின் தங்க மங்கை என போற்றப்பட்டவருமான பி.டி உஷா, பிரபல திரைக்கதை எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத், தர்மசாலா கோவிலின் நிர்வாகியும் சமூக சேவகருமான வீரேந்திர ஹெக்டே ஆகிய 4 பேரும் மாநிலங்களவைக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதில் இளையராஜா குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, படைப்புத்துறையில் சிறந்த ஞானம் பெற்றவரான இளையராஜா, தலைமுறைகள் கடந்து தனது இசையால் மக்களை மகிழ்வித்தவர் எனக் கூறியுள்ளார். மக்களின் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இளையராஜாவின் இசை அமைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். எளிய பின்னணியிலிருந்து வந்து, மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ள இளையராவின் வாழ்க்கை பயணம் பிறருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளதாகவும் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதவில் குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜாவிற்கு மத்திய பாஜக அரசு நியமன எம்.பி பதவி வழங்கும் என சமீபகாலமாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில் தற்போது அந்த தகவல் உறுதியாகியுள்ளது.  இசைத்துறையில் செய்த தனித்துவமான சாதனைகளுக்காக கடந்த 2018 இளையராஜாவுக்கு நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதான பத்மவிபூஷ்ண் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவருக்கு மற்றொரு கவுரவமாக நியமன எம்.பியாக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.