யுவராஜ் மேல்முறையீட்டு மனு: ஜூலை 21ந்தேதி இறுதிக்கட்ட விசாரணை

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 நபர்கள் தாக்கல் செய்த வழக்கை இறுதி விசாரணைக்காக ஜூலை 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற…

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 நபர்கள் தாக்கல் செய்த வழக்கை இறுதி விசாரணைக்காக ஜூலை 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

தமிழ்நாட்டை உலுக்கிய சாதிய ஆணவக் கொலைகளில் ஒன்றாக கோகுல்ராஜ் கொலை வழக்கு உள்ளது. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015ம் ஆண்டு  கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

அதில், “இந்த வழக்கில்  ’சிசிடிவி காட்சிகள், டிவி பேட்டி, தலைமறைவாக இருந்தது ஆகியவற்றின் அடிப்படையில் கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜ் கடத்தல், கொலை தொடர்பான பதிவுகள் இல்லை என்றாலும், அந்தக் காட்சியை அடிப்படையாகக் கொண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள், நிபுணர்களின் சாட்சிகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள மனுதாரர்கள்,  தாங்கள் 10 பேரும் பல ஆண்டுகளாக சிறையில் இருந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, மேல்முறையீடு மனு விசாரணை முடியும் வரை தண்டனையை நிறுத்திவைத்து ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் 10 பேரும் தங்கள் மனுவில் கூறியுள்ளனர்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் பதில் மனு தாக்கல்
செய்ய உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், இன்று  நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கை இறுதி விசாரணைக்காக ஜூலை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.