இந்தியாவில், 2 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளுக்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு.
வாட்ஸ்அப் அதன் மாதாந்திர அறிக்கையைத் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 இன் கீழ் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் 1, 2022 முதல் ஜூன் 30, 2022 வரையிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், 2,210,000 இந்தியக் கணக்குகளைத் தடை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், +91 எனத் தொடங்கும் எண்களைக் கொண்டு இந்திய வாட்ஸ்அப் கணக்கு என அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் தனது தளத்தில் உள்ள குறைதீர்க்கும் வழிமுறைகள் மூலம் இந்தியாவில் உள்ள பயனர்களிடமிருந்து பெற்ற புகார்களின் அடிப்படையில் இந்தக் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் சட்டங்கள் அல்லது வாட்ஸ்அப்பின் சேவை விதிமுறைகளை மீறியதற்காகக் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பின் சேவை விதிமுறைகளை மீறுவதாக நினைக்கும் கணக்குகள் அல்லது நாட்டின் சட்டத்திற்கு எதிரான உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாகப் பயனர்கள் நினைத்தால் grievance_officer_wa@support.whatsapp.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு செய்தியை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் பயனர்கள் கணக்கைப் பற்றிப் புகாரளிக்க/புகார் செய்யத் தேர்வு செய்யலாம் எனவும், செய்தியை நீண்ட நேரம் அழுத்தினால், ‘அறிக்கை’ உள்ளிட்ட பல விருப்பங்கள் தோன்றும். ‘அறிக்கை’ என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பயனர்களுக்கு இரண்டு விருப்பங்கள் வழங்கப்படும். அதில், ‘அறிக்கை’ அல்லது ‘அறிக்கை மற்றும் தடை செய்’ என இருக்கும் அதன் வழியாக அந்த கணக்கைத் தடை செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








