தூய்மைக்கடல், பாதுகாப்பான கடல் இயக்கம் என்ற திட்டத்தின் மூலம் சென்னை மெரினா உட்பட 75 கடற்கரைகள் தூய்மைப்படுத்தப்பட உள்ளது.
தூய்மைக் கடல், பாதுகாப்பான கடல் இயக்கம் என்பது கடற்கரைப் பகுதியை தூய்மையாக்கும் பணியில் குடிமக்கள் 75 நாட்கள் பங்கேற்கும் இயக்கமாகும். இந்த இயக்கம் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி தொடங்கியது. விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் இவ்வேளையில் இப்பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 75 கடற்கரைகளில் ஒவ்வொரு கிலோமீட்டர் பகுதியிலும் 75 தன்னார்வலர்கள் இந்தத் தூய்மை பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்த இயக்கப்பணிகள் சர்வதேச கடலோரத் தூய்மை தினமான வரும் செப்டம்பர் 17-ம் தேதி நிறைவடையும்.
அப்போது இந்தியாவிலேயே 75 கடற்கரையில் 7,500 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட கடற்கரை பகுதிகளை தூய்மைப்படுத்திய மிகப் பெரிய சாதனையாக இது அமையும். இதற்காக சுமார் 10 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. 75 கடற்கரைகளில் தமிழ்நாட்டில் உள்ள 8 கடற்கரைகளும் இதில் அடங்கும்.
தமிழ்நாட்டில், சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் ஆரியமான், பிறப்பன்வலசை, தூத்துக்குடியில் வஉசி, முத்துநகர், முல்லக்காடு, புதுச்சேரியில் காந்தி கடற்கரை ஆகிய கடற்கரைகள் தூய்மைப்படுத்தப்படுகின்றன.
– இரா.நம்பிராஜன்








