அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள அதிதீவிர டவ்-தே புயல், நாளை காலை குஜராத்தில் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, குஜராத் மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து, மேற்கு திசையில், 90 கிலோ மீட்டர் தொலைவில், புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், மகாராஷ்டிர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில், 90 முதல் 100 கிலோ மீட்டர் வரை சூறாவளிக் காற்று வீசி வருகிறது. கடற்கரையோர பகுதிகளில் வசித்து வந்த பலர், வேறு இடங்களில் மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதுடன், பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக கர்நாடக மாநிலம் மங்களூர் மற்றும் கேரளாவில் சில பகுதிகளில் இந்த புயல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று இரவு புயல் தாக்க இருப்பதை முன்னிட்டு, குஜராத் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புயல் தாக்க உள்ள பகுதிகளில் பேரிடர் மேலாண்மை குழுவினர் தயாராக உள்ளனர். அங்கு 185 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புயல் தாக்கம் காரணமாக மின்சேவை பாதிக்கப்படும் என்பதால் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்காக, மருத்துவமனைகளில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.







