மகாராஷ்டிராவில் தொடங்கிய பருவமழை – மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை!

மும்பையில் பருவமழை தீவிரம் காரணமாக அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் அல்லது…

மும்பையில் பருவமழை தீவிரம் காரணமாக அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் அல்லது 2-வது வாரம் பருவ மழைக்காலம் தொடங்கிவிடும். இந்த ஆண்டு நேற்று வரை மழைக்காலம் தொடங்கவில்லை. இந்நிலையில் இன்று காலை மும்பையின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் அடுத்த 4-5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

ஏற்கனவே ஒரு வாரத்திற்கு மேல் தாமதமாகிவிட்ட தென்மேற்கு பருவமழை இன்று மகாராஷ்டிராவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மும்பை வானிலை ஆய்வு மையம் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த 4-5 நாட்களில் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும். வானிலை அடுத்த 5 நாட்களுக்கு மோசமடையும்” என தெரிவித்துள்ளது.

https://twitter.com/RMC_Mumbai/status/1672212932095283200

முன்னதாக மும்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட பதிவில். “பருவமழை மும்பையை நோக்கி முன்னேறுகிறது. அடுத்த 3-4 நாட்களில் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் இன்னும் சில பகுதிகளில் பருவமழை மேலும் முன்னேறுவதற்கான சூழ்நிலைகள் சாதகமாகி வருகின்றன.” இவ்வாறு தெரிவித்தது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 2 நாட்களில் சத்தீஸ்கரின் இன்னும் சில பகுதிகள், ஜார்கண்ட் மற்றும் பீகாரின் எஞ்சிய பகுதிகள், கிழக்கு மத்தியப் பிரதேசத்தில் சில பகுதிகள், உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் உத்தரகாண்டின் சில பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை மேலும் முன்னேறுவதற்கு சாதகமான சூழல்கள் உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

https://twitter.com/Indiametdept/status/1672194587966992384

மேலும் ஒடிசாவில் வரும் ஜூன் 26-ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், பீகார் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று கனமழை பெய்யும் என்றும், வடமேற்கு இந்தியாவில், உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 27-ம் தேதி வரை கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்றும், உத்தரப் பிரதேசத்தில் இன்று முதல் ஜூன் 26-ம் தேதி வரை கனமழை பெய்யும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.