நடிகை சித்தி இத்னானி மும்பையில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று பரிசுகள் வழங்கி அன்றைய நாளை செலவிட்டார். இதுகுறித்து சித்தி இத்னானி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு வெளீயான ”கிராண்ட் காலி” என்னும் குஜராத்தி மொழி திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமான சித்தி இட்னானி தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வந்தார். பின் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார்.
அண்மையில் ஆர்யா நடிப்பில் வெளியான ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்திருந்தார். மேலும் இந்தியில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஒருவராக நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை சித்தி இட்னானி நடிப்பதைத் தாண்டி அவ்வப்போது ஆதரவற்றோர்களை சந்தித்து உதவி வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு சென்னையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்திற்குச் சென்று உணவு வழங்கினார். அந்த வகையில் தற்போது மும்பை பாந்திராவில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளிக்குச் சென்று பரிசுகளை வழங்கியுள்ளார். மேலும் அவர்களுடன் பேசி மகிழ்ந்து தனது சகோதரரின் பிறந்தநாளை அவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்து சித்தி இத்னானி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “ இந்த உலகில் நீங்கள் பிறருக்கு கொடுக்கும் மிகச்சிறந்த பரிசு நேரத்தை செலவிடுவது, நான் எனது மதிய நேரத்தை இந்த மாற்றுத்திறனாளி தேவதைகளுடன் செலவிட்டேன். அவர்களது முகத்தில் உண்டான சிரிப்பு விலைமதிப்பில்லாதது.” என்று குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது பலரது கவனத்தைப் பெற்று பாராட்டுக்களை அள்ளி வருகிறது.









