டெல்லி மெட்ரோ ரயில் பெட்டியில் பயணித்த குரங்கின் வீடியோ தற்போது
சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நாம் முதலில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போது, அவை நமக்குள் பல ஆச்சரியங்களை ஏற்படுத்துகின்றன. அப்படித்தான், முதல்முதலாக சென்னையில் மெட்ரோ வந்தபோது, அதில் பயணத்தே தீர வேண்டும் என்ற பேராவல் அனைவருக்கும் இயல்பாகவே இருந்திருக்கும். இப்போது அந்த ஆசை நம் மரபு வழி முன்னோரான குரங்குகளுக்கும் துளிர்விட்டுள்ளது.
டெல்லியில் மெட்ரோ ரயிலின் பெட்டிக்குள் ஏறிய குரங்கு ஒன்று, மெட்ரோ ரயிலை ஆச்சர்யம் பொங்க பார்க்கிறது. சிறிது நேரம் அந்த பெட்டிக்குள் உலாவும் குரங்கு, ஒரு பயணியை போல இருக்கையில் அமர்ந்து, சகபயணியின் அருகில் அமர்ந்து ஒய்யாரமாக பயணித்தது. அவ்வப்போது ரயிலின் கண்ணாடிகளுக்கு அப்பால் இருக்கும் இடத்தை ஆர்வமாக ரசிக்கிறது. இந்த வீடியோவை ட்விட்டரில் அஜைடொர்பை என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக மெட்ரோ அதிகாரிகள் கூறும்போது ‘குரங்கு எப்படி ரயிலுக்குள் வந்தது என்று தெரியவில்லை. அந்த குரங்கு யாரையும் தொந்தரவு செய்யவில்லை. இந்த சம்பவம் தெரிந்த உடனே அடுத்த ரயில் நிலையத்தில் அந்த குரங்கு அப்புறப்படுத்தப்பட்டது’ என்று விளக்கம் அளித்துள்ளனர்.
ஏற்கனவே மெட்ரோ ரயிலிலால் பட்டாம் பூச்சிகள் உயிரிழக்கின்றன என்று சென்னையை சேர்ந்த ஒரு இளைஞர் சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் அளித்திருந்தார். வளர்ச்சி என்ற பெயரில் காட்டு விலங்களின் இடங்களை அழித்துவிட்டு, அந்த இடத்திற்கும் மீண்டும் வரும் விலங்கள் தொல்லையாக இருப்பதாக புகார் அளிப்பது மனிதர் செய்யும் தொடர் வேலையாக இருக்கிறது. இந்த செயலை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.







