நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி; நெசவாளர்கள் கண்ணீர்

ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெசவாளர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் நெசவாளர் கோபிநாதன். சென்னை மயிலாப்பூரைச்…

ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெசவாளர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் நெசவாளர் கோபிநாதன். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி 26 பேரிடம் ரூ.60.60 லட்சம் மோசடி செய்துவிட்டதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோபிநாதன் உட்பட 25-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் மனு அளித்தனர். பின்பு காவல் கண்காணிப்பாளரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை தெரிவித்தார். இதுகுறித்து கோபிநாதன் கூற்றுபடி, சென்னையைச் சேர்ந்த கமலக்கண்ணன், கடந்த 2019-ம் ஆண்டு ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.10,000 வட்டி தருவதாகக் கூறி உறுதிமொழிப் பத்திரம் தந்ததாகத் தெரிவித்திருக்கிறார். அதன்படி கோபிநாதன் மற்றும் அவரது சக நெசவாள நண்பர்கள் மொத்தம் 26 பேர் ரூ. 60.60 லட்சம் முதலீடு செய்துள்ளனர்.

நெசவாளர்கள் கண்ணீர்

இதனையடுத்து கமலக்கண்ணன் தான் கூறியதுபோல் சில மாதங்கள் சரியாக வட்டி தந்துள்ளார். ஆனால் அதன்பின்னர் (4.11.2020) அன்று முதல் வட்டி கொடுப்பதை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து கோபிநாதன் முதலீட்டைத் திருப்பிக் கேட்டும் கமலக்கண்ணன் தரவில்லை. கோபிநாதனிடம் மோசடி செய்ததுபோல் பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் பகுதிகளில் சுமார் 200 பேரிடம் முதலீடு பெற்று ரூ.10 கோடி வரை கமலக்கண்ணன் மோசடி செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் குடும்பத்தோடு உயிரிழப்பு கொள்ளும் அவலம் ஏற்படும் எனவும் கண்ணீர் மல்க பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.