Money Heist இணைய தொடரில் வரும் கதாபாத்திரத்தை போல முகமூடி அணிந்து வாலிபர் ஒருவர் காரின் மேல் நின்றுகொண்டு ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா நகரில் அமைந்துள்ள வெஸ்ட் சைட் மாலுக்கு வெளியே நேற்று மாலை மணி ஹெய்ஸ்ட் இணைய தொடரில் வரும் கதாபாத்திரத்தை போல் முகமூடி அணிந்த இளைஞர் ஒருவர் 10-20 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசிக்கொண்டு சென்றார். அவற்றை எடுப்பதற்காக மக்கள் கூட்டம் சாலையில் திரண்டது. இதனால் அங்கு சுமார் 20 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதில் ஒருவர் காரின் மேல் ஏறி தனது பையிலிருந்து நோட்டுகளை எடுத்து வீசுவது போல் தெரிகிறது. இந்த நோட்டுகளை எடுக்க பாதசாரிகள், ஓட்டுனர்கள், இ-ரிக்ஷா ஓட்டுனர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கருப்பு நிற காரில் பயணித்த நபர் சிவப்பு நிற ஆடை அணிந்து, பிளாஸ்டிக் முகமூடி அணிந்து தனது அடையாளத்தை மறைத்துள்ளார்.
இச்சம்பவம் ஜவஹர் சர்க்கிள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜிடி பஜார் அருகே நடந்துள்ளது. வீடியோவைப் பார்த்த பிறகு, இந்த முழுச் சம்பவமும் ‘Money Heist’ வெப் சீரிஸின் காட்சி போல் தெரிகிறது. இதனைதொடர்ந்து அமைதியை குலைத்த குற்றச்சாட்டின் பேரில் சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காரின் எண் மூலம் குற்றவாளியின் வீட்டை போலீஸ் குழு சென்றடைந்தது.
அவரிடம் விசாரணை நடத்தி அவர் பற்றிய மற்ற தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.







