ஒடிசா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் மஜி தேர்வு!

ஒடிசாவின் புதிய முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த மோகன் சரண் மஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவைத் தோ்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில் ஒடிசா மாநிலத்தை ஆண்டு வந்த நவீன்…

ஒடிசாவின் புதிய முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த மோகன் சரண் மஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மக்களவைத் தோ்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில் ஒடிசா மாநிலத்தை ஆண்டு வந்த நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதளம் கட்சியை, பாஜக வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது. மொத்தமுள்ள 147 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 78 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக முதலமைச்சர் பதவியில் நவீன் பட்நாயக் நீடித்து வந்த நிலையில், இப்போது பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராகவுள்ளார்.

இந்நிலையில் ஒடிசா மாநில புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக, அம்மாநில பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று (ஜூன் 11) நடைபெற்றது. ஒடிசாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான தர்மேந்திர பிரதான் முதலமைச்சராக வாய்ப்புள்ளதாக முதலில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில் மீண்டும் கேபினட் அமைச்சராகிவிட்டார்.

இதனால், பிரஜாராஜ்நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் பூஜாரி முதலமைச்சராக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அதேநேரம், பாஜக மாநிலத் தலைவர் மன்மோகன் சமல், கே.வி.சிங், மோகன் சரண் மஜி உள்ளிட்டோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜகவின் மோகன் சரண் மஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் சட்டப்பேரவை குழு தலைவராக மோகன் மஜியை அக்கட்சி எம்எல்ஏக்கள் தேர்வு செய்துள்ளனர். பாஜகவின் மூத்த தலைவரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையிலான தேர்வு கமிட்டி மோகன் சரண் மஜியை முதலமைச்சராக தேர்வு செய்து அறிவித்துள்ளது.

4 முறை சட்டமன்ற உறுப்பினரான மோகன் சரண் மஜி, மாநிலத்தின் பழங்குடியின மக்களின் முகமாக அறியப்படுகிறார். நடப்பு சட்டப் பேரவை தேர்தலில் கியோஞ்சர் தொகுதியில் அவர் போட்டியிட்டார். ஜூன் 12-ம் தேதி அவர் ஒடிசா முதலமைச்சராக அவர் பொறுப்பேற்று கொள்கிறார்.

ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் பாஜக அரசு பதவியேற்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு முன்பாக, அங்கு பிரதமர் வாகனப் பேரணி நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.